

வரும் ஜூன் 2-ம் தேதி நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் வட்டி குறைப்பு இருக்கும் என்று முன்னணி தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.
உணவுப்பொருட்களின் விலை குறைந்திருப்பதால் ஜூன் மாதம் வட்டி குறைப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஹெச்எஸ்பிசி நிறுவனம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பேங்க் ஆப் அமெரிக்கா-மெரில் லின்ச் வரும் ஜூன் 2-ம் தேதி 0.25 சதவீத வட்டி குறைப்பு இருக்கும் என்றும், அதற்கு பிறகு வட்டி குறைப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.
வரும் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 0.50 சதவீதம் வரை வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜூன் மாதத்துக்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்திருக்கிறது.
மார்ச் மாத சில்லரை பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.17 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக வட்டி குறைப்பு குறித்த யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்போதைக்கு சில்லரை பணவீக்கம் குறைவாக இருந்தா லும், விலை உயர்வதற்கு இருக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது என்று ஹெச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் பொருட்களின் விலை உயரும்போது இந்தியாவிலும் விலை ஏற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.