

இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. இதனால் அந்நிய முதலீடுகள் மட்டுமின்றி உள்நாட்டு முதலீடுகளும் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதிபடக் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 1.33 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளன என்று அவர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது: இந்தியாவில் முதலீடு செய்வது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும். ஏனெனில் நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. மேலும் முதலீடு தொடங்கும் சுழற்சி மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்றார்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன. இதன்படி 23 பொதுத்துறை நிறுவனங்களில் ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, ஐ.ஓ.சி. என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் முதலீடு ரூ. 1.33 லட்சம் கோடியாக உயரும். கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன விரிவாக்க செலவு ரூ. 1.25 லட்சம் கோடியாக இருந்தது.
வங்கிகளுக்கு மூலதன தேவை 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ. 45,528 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது ரூ. 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இடைக்கால பட்ஜெட்டில் அரசு வங்கிகளுக்கு ரூ. 11,200 கோடி ஒதுக்கீடு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2013-14-ம் நிதி ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 2,700 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டு இது 2,695 கோடி டாலராக இருந்தது. கடைசியாக கிடைத்த விவரத்தின்படி ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 2,690 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது.
நாட்டின் பணவீக்கம் உயர்ந்ததற்கு பல்வேறு காரணிகள் அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் விலை உயர்வும் முக்கியக் காரணமாகும். இப்போது உணவுப் பொருள்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும் அதே வேளையில் வளர்ச்சியை முடுக்கிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியும் பணவீக் கத்தைக் கட்டுப்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளை ஒவ்வொரு நிதிக் கொள்கையிலும் கடைப்பிடித்துவருகிறது என்றார்.
ரகுராம் ராஜன் மாற்றப்படுவாரா?
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரகுராம் ராஜன் மிகவும் திறமையானவர். அவரது நியமனத்துக்கு புதிய அரசு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
2012-13-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.5 சதவீத அளவுக்குச் சரிந்தது. 2013-14-ம் நிதி ஆண்டில் இது 4.9 சதவீதமாக உயர்ந்தது. நடப்பு நிதி (2014-15) ஆண்டில் இது 5.5 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
வோடபோன் விவகாரம்
ரூ. 20 ஆயிரம் கோடி வரி செலுத்த வேண்டிய விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் தொலைத் தொடர்பு நிறுவனமான வோட போன் பிரச்சினை குறித்து சர்வதேச நீதிமன்றம் செல்ல உள்ளதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அமைச்சகத்துக்கு குறிப்பு அனுப்பிவிட்டேன். எனவே சர்வதேச தீர்ப்பாயம் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு பதில் அனுப்பப்படும். விசாரணை யின்போது அரசு தனது நிலைப்பாட்டை விளக்கும் என்று அவர் கூறினார்.