Published : 09 May 2015 04:56 PM
Last Updated : 09 May 2015 04:56 PM

தொழில் ரகசியம்: வித்தியாசமாயிருந்தால் வெற்றி பெறலாம்!

வீட்டிலிருந்து அவசரமாக கிளம் பிக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி நிறுத்தி, ‘ஏங்க, ஒரு விஷயம்’ என்கிறாள். ‘இருபது வருஷம் சொல்லாததை இப்ப சொல்ல வந்துட்டியா, டைம் ஆகுது’ என்று நகர்கிறீர்கள். வழியில் நண்பன் நிறுத்துகிறான். ‘மாப்ளே நாளைக்கு’ என்பவனை ‘அத நாளைக்கு பேசுவோம், அவசரம்டா’ என்று ஓடுகிறீர்கள். எல்லா சிக்னலும் பச்சையாக இருக்கக்கூடாதா என்று பரபரக்கும் கார் பயணம். அப்பொழுது அதைப் பார்க்கிறீர்கள். படாரென்று பிரேக் போடுகிறீர்கள். இறங்கிப் போய் பார்க்கத் தூண்டும் காட்சி.

ஊதா கலரில் ஒரு மாடு நிற்கிறது!

அட, என்ன ஆச்சரியம். இந்தக் கலரில் கூட மாடு இருக்குமா? ஊதா கலரு ரிப்பன் ஓகே. ஊதா கலரு மாடா? இதன் பால் என்ன கலர் இருக்கும்? சர்கஸ் மாடா? மேக் அப் போட்டிருக்காங்களா?

மனைவி நிறுத்த முடியாத அவசரத்தை, பால்ய நண்பன் தடுக்க முடியாத உங்கள் ஓட்டத்தை நாலு கால் ஜீவன் நிறுத்திவிட்டது.

அதுவே ஒரு வெள்ளை மாடென்றால் நின்றிருப்பீர்களா?

வித்தியாசம்தான் ஈர்க்கும்

வித்தியாசமாய் தெரிந்ததால் நின்றீர்கள். சாதா மாடா அது, ஊதா மாடாச்சே! பார்த்திராத ஆச்சரியம் என்பதால் பரவசம். இதுதான் மனித இயல்பு. வித்தியாசமாய் இருந்தால், வேலை வெட்டியை விட்டு விட்டு, வலிய போய், வெட்கம் இல்லாமல், வாய் பிளந்து வக்கணையாய் பார்க்கும் மனித வர்க்கத்தின் விகல்பமில்லாத இயல்பு.

இப்படி இருந்தும், இது தெரிந்தும் கடையை, வியாபா ரத்தை, பிராண்டை வித்தியாசமாய் காட்டாமல் பத்தோடு பதினொன்றாகத்தான் பலர் காட்டுகிறார்கள். செய்வதையும் செய்து விட்டு ‘மத்த கடை மாதிரி என் கடை இருந்தும் வியாபாரம் ஆக மாட்டேங்குது’ என்று புலம்புகிறார்கள்.

‘மத்த பிராண்ட் போல என் பிராண்ட் தரமானதா இருந்தும் விக்கமாட்டேங்குது’ என்று அழுகிறார்கள். ‘பிறர் மாதிரியே பிசினஸ் பண்ணியும் என் பிசினஸ் சரியா போகல’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

தனித்துவம் தேவை

செய்யும் பிசினஸை வித்தியாசப்படுத்துங்கள்; விற்கும் பிராண்டை தனித்துவமாய் மிளிர வையுங்கள்; அப்படிச் செய்தால் மட்டுமே உங்கள் தொழில் தழைக்கும் என்கிறார் ‘செத் காடின்’. Purple Cow (ஊதா மாடு) பிராண்டை வித்தியாசப்படுத்தும் முறை மட்டுமல்ல, இவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் தலைப்பும் கூட.

சாதாரணமாக மார்க்கெட்டிங் செய்யும் தொழிலதிபர்கள் வெள்ளை மாடுகள். பத்தோடு ஒன்றாக நிற்கும் ஆட்டு மந்தைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிராண்டையும் பிசினஸையும் வித்தியாசப்படுத்தி விற்கும் தொழிலதிபர்களே ஊதா கலர் மாடுகள். என்ன கூட்டத்திலும் தனியாய் தெரிவார்கள். அழகாய் மிளிர்வார்கள்.

வெற்றிபெற்ற நிறுவனங்கள்

ஓவென்று ஒப்பாரி வைக்கத் தான் டீவி சீரியல்கள் என்றிருந்த காலத்தில் போட்டி நிகழ்ச்சிகள், ரியாலிடி ஷோக்கள் மூலம் தன்னை வித்தியாசப்படுத்திக் காட் டிய ’விஜய் டீவி’ ஒரு ஊதா மாடு.

கெமிக்கல்ஸ் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த ஷாம்புக்கள் மத்தியில் சீயக்காய் பேஸ்ட் வடிவில் வந்த ஹெர்பல் ஷாம்பு ’மீரா’ ஒரு ஊதா மாடு.

பெண்களை சிவப்பாக்கு கிறேன் என்று எல்லா கிரீம்களும் கூறியபோது ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று அவர்களுக்கான பிரத்யேக கிரீமாக வந்த ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்சம்’ ஒரு ஊதா மாடு.

சாதா மாடுகளுக்கிடையே சூடாய், சூப்பராய் வெற்றி பெற்ற இந்த ஊதா மாடுகளின் ரகசியம் வெரி சிம்பிள். இவை மற்ற பிராண்டுகள் போலில்லாமல் வித்தியாசமாய் தெரிந்தன. மற்றவர் சொன்னதையே சொல்லாமல் தனித்துவமாய் நின்றன.

வெற்றி சாத்தியமாகாது

பிராண்டுகளை வித்தியாசப் படுத்திக் காட்டாமல் போனால் காணாமல் போகவேண்டும். வித்தியாசமில்லாத வெள்ளை மாடுகளைப் போன்ற பிராண்டுகள் விளம்பரத்திற்கு எத்தனை கோடி செலவழித்தாலும் அவை வித்தி யாசமாய் தெரியப்போவதில்லை. வித்தியாசமாய் இல்லாத எதையுமே ஒரு முறை பார்க்கவே போரடிக்குமே.

ஆனால் ஊதா கலர் மாட்டிற்கு விளம்பரம் தேவையில்லை. புரமோஷன் அவசியமில்லை. வாடிக்கையாளர்களே வந்து க்யூ கட்டி நிற்பார்கள். வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். வாய் பொத்தி வாங்குவார்கள்!

இது இப்படி இருந்தும் நூற்றுக்கு தொண்ணூறு மார்க் கெட்டர்கள் சாதா மாடுகளை கட்டிக்கொண்டு தான் அழுவேன் என்று அடம் பிடிக்கிறார்கள். வெற்றி பெற்ற பிராண்டுகள் போலவே தன் பிராண்டும் இருந்தால் போதும், தானும் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். மற்ற பிராண்டுகளைப் போலவே தங்கள் பிராண்டை செய்து விற்கிறார்கள். மற்றவர் கடையைப் போலவே தங்கள் கடையை வடிவமைத்துத் திறக்கிறார்கள். அடுத்தவர் பிசினஸ் போல் தங்கள் பிசினஸை அமைக்கிறார்கள். எதுவும் சரியாய் போகாத போது மற்றவர் போலவே ஓவென்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஏன் வாங்க வேண்டும்

வெற்றி பெற்ற பிராண்டைப் போலவே உங்கள் பிராண்டும் இருந்தால் வாடிக்கையாளர் உங்கள் பிராண்டை எதற்கு வாங்கவேண்டும்? வெற்றி பெற்ற பிராண்டையே வாங்கலாமே. இது ஏனோ பலருக்குத் தெரிவதில்லை. சொன்னாலும் புரிவதில்லை.

‘சரவணா ஸ்டோர்ஸ்’ குறைந்த விலை என்று தன்னை வித்தியாசப்படுத்தி வெற்றிப் பெற்றிருக்கிறது. நாமும் குறைந்த விலையில் விற்றால் வெற்றி என்று நினைத்து குறைந்த விலை என்று கூறித் திறந்த பல கடைகள் மூடப்பட்டுவிட்டன. குறைந்த விலை என்று எந்த கடை கூறினாலும் வாடிக்கையாளருக்கு சரவணா ஸ்டோர்ஸ் தானே நினைவிற்கு வரும்? பிறகு எத்தனை கோடி செலவழித்து விளம்பரப்படுத்தி என்ன பயன்? சரவணா ஸ்டோர்ஸுக்குத் தானே உங்கள் விளம்பரம் உதவும்? ‘ஐயா, எங்களுக்கு விளம்பர தர்மம் பண்ணுங்கய்யா என்று’ அவர்கள் கேட்டார்களா?

பயம்தான் காரணம்

வித்தியாசம் காட்டாமல் மார்க்கெட்டிங் செய்வதற்கு காரணம் பலருக்குள் இருக்கும் பயம். ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்லிக் கொடுத்தே பழக்கப்பட்டுவிட்டோம். வித்தியாசமாய் செய்வது தப்பு என்றே பலர் நினைக்கிறார்கள். தனியாய் தெரிவது திமிர்தனம் என்றே முடிவு கட்டிவிட்டார்கள். தனித்துவமாய் தெரிந்தால் கண்ணடிபடும் என்று பயப்படு கிறார்கள்.

விதி விட்ட வழி என்றாவது பிசினஸ் செய்வார்களே ஒழிய வித்தியாசம் காட்டிய வழி என்று புதிய பாதைகளில் பயணிக்கமாட்டார்கள். ஊதா மாடு ரிஸ்க், சாதா மாடு தான் பெஸ்ட் என்று பழையதை, எல்லாரும் செய்ததையே செய்யப் பழகிவிட்டார்கள்.

நீங்களும் சாதா மாடு கூட்டத்தில் சேர்ந்து தொலைக்காதீர்கள். உங்கள் பிராண்டை தனியாய் தெரியவைக்க என்ன தேவை என்று யோசியுங்கள். உங்கள் கடையை தனித்துவமாய் மிளிர வைக்க என்ன வழி என்று சிந்தியுங்கள். உங்கள் பிசினஸ் வித்தியாசமாய் விளங்க வைக்கும் வேலையை முடுக்கிவிடுங்கள். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சாதா மாடு நல்லா முட்டும். ஊதா மாடே கல்லா கட்டும்!

பாட்டிலில் விற்ற ஷாம்பு சாதா மாடு. சாஷேவில் வந்த ‘சிக் ஷாம்பு’ ஊதா மாடு. தமிழ் சினிமா என்றால் ஹீரோயிசம் என்பது சாதா மாடு. அப்படியில்லாமல் வெளிவந்த ‘சூது கவ்வும்’ ஊதா மாடு. பிராண்டை, கடையை, தொழிலை இனிமேலும் வித்தியாசம் காட்டாமல் சாதா மாடாய் வைத்து கறக்காதீர்கள். எதுவும் கிடைக்காது.

தனித்திருந்தால் வெற்றி

அனைவரும் செல்லும் பாதையில் சென்றால் அனைவரும் சென்ற இடத்திற்குத் தான் சென்று சேர முடியும். அங்கு கூட்டம் மோதும். ஆட்டு மந்தைப் போல் அனைவரும் ஒரே பாதையில் சென்றால் கூட்டம் இருக்காதா. புதிய பாதையைத் தேடிப் பிடித்து பயணித்தால் தான் புதிய இடங்களைப் பார்க்கமுடியும். புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க முடியும். புதிய வெற்றிகளைப் பெற முடியும்.

நம்பிக்கை இல்லையென்றால் கிறிஸ்டஃபர் கொலம்பஸ் என்று ஒருவர் இருந்தார். அவரை வேண்டு மானால் கேட்டுப் பாருங்கள்!

satheeshkrishnamurthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x