

பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு நிதி சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ஏடிபி) கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜேட்லி, அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறியது:
முதலீடுகளை ஈர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. இதனால் 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான வளர்ச்சியை எட்டுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச் சியை எட்டுவதற்கான சாத்தியங் கள் உள்ளன. இத்தகைய வளர்ச் சியை எட்டுவதற்கு கிராமப்புற கட்டமைப்பு மற்றும் பாசன வசதித்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவற்றின் மூலம்தான் வளர்ச்சியை எட்ட முடியும் என்று குறிப்பிட்டார்.
இது தவிர பல துறைகளிலும் முதலீடுகள் தேவைப்படுகின்றன. கட்டமைப்புத் துறை முதலீடு அதிகரிப்பதால் உற்பத்தித் துறை பலன் பெறும். இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.
ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச் சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு எட்டும்போதுதான் நாட்டில் வறுமையில் வாடுவோரின் எண் ணிக்கை குறையும் என்று அவர் குறிப்பிட்டார். அத்தகைய நிலையை எட்டுவதைத்தான் ஆர் வத்தோடு எதிர்நோக்கியிருப்பதாக ஜேட்லி குறிப்பிட்டார்.
இந்திய அரசியல் வரலாற்றில் பதவியேற்ற முதலாண்டிலேயே பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்தது பாஜக அரசுதான் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
அனைத்துத் துறைகளிலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடாக இருந்தாலும் சரி, அதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே முதலீடுகளில் கூடுதலாக கிடைப்பவைதான் என்றார்.
தொழில் தொடங்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் அரசின் செயல்பாடுகள் எளிமை யாக இருக்க தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் ஒப்புதல்கள் விரைவாக அளிக்கப்படுகிறது. கட்டமைப்புத் துறை திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் எவரும் துன்புறுத்தப்படுவதில்லை. ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து பேசிய ஜேட்லி, இந்த விஷயத்தில் பெரும்பான்மையான மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பல தடவை மாநில நிதி அமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நடத்தியுள்ளேன். பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இது தொடர்பாக பெருமளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இது அமலுக்கு வரும்போது இதனால் ஆதாயமடையப் போவது மாநிலங்கள்தான். மேலும் இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்ளநாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெற வழியேற்படும். இதனால் வரி வருமானமும் அதிகரிக்கும். மேலும் இதனால் வரி தொடர்பான தாவாக்கள் குறையும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.