

அந்நிய முதலீடுகள் செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளை அந்நாடுகளின் கரன்சிகளாக முழுவதுமாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வளரும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற புதிய ஓய்வூதியக் கொள்கை தொடர் பான மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகை யில் அவர் இக்கருத்தைத் தெரி வித்துள்ளார். சர்வதேச பொருளா தார அளவுக்கு இந்தியா உயர வேண்டுமெனில் இத்தகைய நடவடிக்கை அவசியமானது என்று குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வந்துள்ளோம். சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உயர வேண்டுமானால் நமது பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்னும் விரிவாக்கப்பட வேண் டும். அவ்விதம் விரிவுபடுத்துவ தென்றால் முதலீடுகளை முழுவது மாக மாற்றத்தக்க வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
சர்வதேச பொருளாதாரத்தில் நமக்குள்ள பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உணர்ந்து நிச்சயம் செயல்படுவதோடு இந்த இலக்கை எட்டுவதற்கான பயணத்தையும் தொடர்வோம் என்றார்.
சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தனது சமீபத்திய கருத்துக் கணிப்பில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவைக் காட்டிலும் இந்தியா முன்னேறும் என தெரிவித்திருந்தது.
அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள், முதலீடுகள் அதிகரிப்பது மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என தெரிவித்திருந்தது. இதேபோல உலக வங்கியும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி நடப்பாண்டிலேயே இருக்கும் என தெரிவித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று புனேயில் உள்ள கோகலே பொருளாதார கல்வி மையத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ரூபாயை முற்றிலுமாக மாற்றும் வசதி இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் இது தொடர் பான கருத்துகளை வெளியிட் டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தற்போது நடப்புக் கணக்கு மாற்றத்துக்கு மட்டுமே அனுமதிக் கப்படுகிறது. மூலதனக் கணக்கு மாற்றத்துக்கு அனுமதிக்கப்படுவ தில்லை. அவ்விதம் அனுமதிக்கப் பட்டால் மூலதன பரிவர்த்தனைகள் எளிதாக மேற்கொள்ள முடியும். ஆனால் அந்நியச் செலாவணி கையிருப்பை ஸ்திரமாக வைத்துக் கொள்வதற்காக இந்த முறை அனுமதிக்கப்படுவதில்லை.
ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பிறகுதான் மூலதன கணக்கு மாற்றத்தில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
ரூபாயை முழுவதுமாக மாற்றும் வசதியானது இந்தியாவை சர்வ தேச அளவில் பொருளாதாரத்தில் மிக முக்கிய நாடாக உயர்த்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள் ளனர். இருப்பினும் ரிசர்வ் வங்கி விதிக்கும் பகுதியளவிலான கட்டுப்பாடுகள், சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி ஏற்படும்போது அதன் பாதிப்பு இந்தியாவில் பெருமளவு இருக்காமல் தடுக்க உதவும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
1997-98-ம் ஆண்டுகளில் தெற்காசிய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டும் அவர்கள் இந்த நாடுகள் முழுவதுமாக தங்கள் நாட்டு கரன்சியை மாற்றும் வசதியை கொண்டிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
முதியவர்களைக் காக்கும் பழக்கம் இந்தியாவில் இப்போது அதிக அளவில் மாறிவருகிறது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டம் மிகவும் அவசியமானது என்று இந்த மாநாட்டில் சின்ஹா குறிப்பிட்டார்.