Published : 07 Apr 2015 11:42 AM
Last Updated : 07 Apr 2015 11:42 AM

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: வங்கிகள் வட்டியை குறைக்க ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்தவிதமான மாற்றங்களையும் செய்யவில்லை. ரெபோ விகிதம், ரிசர்வ் ரெபோ விகிதம், ரொக்கக் கையிருப்பு விகிதம் உள்ளிட்ட எந்த விகிதங்களையும் ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. பெரும்பாலான சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப் புக்கு ஏற்பவே ரிசர்வ் வங்கியின் முடிவுகள் வந்திருக்கின்றன.

இதன்படி, ரெபோ விகிதம் 7.5 சதவீதமாகவும், ரொக்கக் கையிருப்பு விகிதம் நான்கு சதவீதமாகவும் இருக்கிறது.

இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி இரு முறை வட்டி குறைப்பு (0.50 சதவீதம்) செய்தது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் வட்டி குறைப்பினை செய்ய வில்லை. ஏற்கெனவே குறைந்த வட்டி விகிதங்களின் பலனை வாடிக் கையாளர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில்தான் அடுத்த வட்டி குறைப்பு பற்றி யோசிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

வங்கிகள் கடன் வாங்கும் தொகைக்கான வட்டி விகிதம் அதிகம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வாங்கும் தொகைக்கான வட்டி விகிதம் குறைந்திருக்கிறது, வங்கிகளிடம் பணப்புழக்கம் இருக்கிறது. வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்காவிட்டால் எதுவும் நடக்காது. கூடிய விரைவில் சந்தையில் போட்டி அதிகரித்து வட்டியை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். வங்கிகள் செய்யும் வட்டி குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது என்றார்.

பாதிப்பு இல்லை

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்துவதால் நமக்கு பாதிப்பு ஏதும் இருக்காது. பெடரல் ரிசர்வ் முடிவுகள், சர்வதேச அளவில் பாதித்தாலும் நம்முடைய கடன் மற்றும் நிதிக்கொள்கை முடிவெடுப்பதை பாதிக்காது என்றார் ராஜன் தெரிவித்தார். மேலும் உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு தேவையை வைத்தே முடிவெடுக்க முடியும். அதுதான் நம்முடைய இலக்கு. பெடரல் ரிசர்வ் முடிவினை பற்றி நான் பெரிதாகக் கவலைப்பட வில்லை என்றார் ராஜன்.

ஜூன் அல்லது செப்டம்பரில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.ஆர்.ஆர். குறைக்க முடியாது

வட்டி குறைப்புக்கு முன்பு ரொக்க கையிருப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற எஸ்.பி.ஐ.யின் கோரிக்கையை ரகுராம் ராஜன் நிராகரித்தார். ரொக்கக் கையிருப்பு விகிதத்தைக் குறைப்பதற்கும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடியும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சி.ஆர்.ஆர். விகிதம் குறைக்க வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போதைக்கு அது தேவை இல்லாதது. ஒரு சதவீதம் சி.ஆர்.ஆர். குறைந்தால் கூட 0.07 சதவீதம் முதல் 0.08 சதவீத அளவுக்குதான் வட்டியைக் குறைக்க முடியும் என்றார் ராஜன்.

கூடுதல் சலுகை

வங்கியின் இயக்குநர் குழுவில் திறமையானவர்கள் தேவை. அவர்களை கொண்டு வருவதற்கும், தக்க வைப்பதற்கும் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் தேவைப்படுகிறது என்று கொள்கை முடிவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளி யிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

முன்னுரிமை கடன்

முன்னுரிமை கடன்களுக்கான இறுதி விதிமுறைகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று ராஜன் தெரிவித்தார். இதற்கான வரைவு விதிமுறைகளுக்கு பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இறுதி விதிமுறை இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார்.

ரூபாய் பத்திரங்கள்

வெளிநாடுகளில் குறைந்த வட்டி இருக்கிறது என்று அங்கு கடன் வாங்குகிறார்கள். ஆனால் கரன்ஸி வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. அதனால் ரூபாயின் மதிப்பை குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்கும் திட்டம் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. அதிகபட்ச ஏற்ற இறக்கத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் வெளிநாட்டில் வெளியிட்டு நிதி திரட்ட அனுமதிக்கப்படும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் அடுத்த கடன் மற்றும் நிதிக்கொள்கை வரும் ஜூன் 2-ம் தேதி நடக்க இருக்கிறது.

எஸ்.பி.ஐ. வட்டி குறைப்பு

வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருந்ததை தொடர்ந்து எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதத்தை 0.15 குறைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.85 சதவீதமாக இருக்கும். இந்த வட்டி குறைப்பு வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும். முக்கியமான பொதுத்துறை வங்கி வட்டி விகிதத்தை குறைத்துவிட்டதால் மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடன் கொள்கை அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் (மத்தியில், துணை கவர்னர்கள் உர்ஜித் படேல் (இடது) மற்றும் ஹெச்.ஆர்.கான்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x