

சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக அமல்படுத்துவது, நிதிப்பற்றாக்குறையை குறைப்பது ஆகியவற்றை புதிய அரசு உடனடியாக செய்ய வேண்டும். அப்போதுதான் 7 முதல் 7.5 சதவீத வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்று திட்டக் குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
முதல் வருடம் புதிய அரசின் தேன் நிலவுகாலம். ஒரு வருடத்துக்கு பிறகு புதிய அரசு கொள்கை முடிவுகளை எடுத்தாகவேண்டும். சரியான முடிவுகளை எடுக்கும்பட்சத்தில் நாம் வளர்ச்சியின் பாதைக்குத் திரும்ப முடியும். 8 சதவீத வளர்ச்சி கடினமாக இருந்தாலும் கூட 7 முதல் 7.5 சதவீத வளர்ச்சியை நாம் எட்ட முடியும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போதைய அரசு நிதிப் பற்றாக்குறையை குறைக்காதது பெரிய தவறு என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதை குறைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டோம் என்றார். முதலீடுகள் 35 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தொழில் துறையின் வளர்ச்சியைப் பொறுத்தே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இருக்கிறது. இப்போது கட்டுமானம், சுரங்கம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் தேக்க நிலை நிலவுகிறது. உற்பத்தித் துறை இரட்டை இலக்க வளர்ச்சி அடைய வேண்டும். இதை நம்பித்தான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எஸ்.எம்.இ.)வளர்ச்சி இருக்கிறது. பெரு நிறுவனங்கள் வளராவிட்டால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளராது என்றார்.