

நிதி கிடைக்காமல் அவதிப்படும் தொழில்துறையினருக்கு நிதி கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்படுவதுதான் முத்ரா வங்கி என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழிலுக்கு நிதி உதவி கிடைக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நாட்டின் முதலாவது முத்ரா வங்கியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியது:
சுய தொழில் புரிவோருக்கும், சிறு வணிகர்களுக்கும் உதவும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 10 லட்சம் வரை குறைந்த வட்டிக்குக் கடன் பெற முடியும்.
நாட்டில் 5.75 கோடி சுய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை ரூ. 11 லட்சம் கோடி முதலீட்டில் செயல்படுகின்றன. இதன் மூலம் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இத்துறைக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் 1.25 கோடி பேர்தான் பெரிய தொழில் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். ஆனால் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களால் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடனுதவி கிடைக்காதவர்களுக்கு கடன் அளிப்பதற்காக இது தொடங்கப்படுகிறது.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த வங்கிக்கு ரூ. 20 ஆயிரம் கோடி மூலதனம் அளிக்கப்படும். இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கலாம். சிறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மறு உதவிக் கடனாக 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். என்றார் மோடி.
முத்ரா வங்கி செயல்பாடு குறித்து விளக்கி நிதிச் செயலர் ஹஷ்முக் ஆதியா பேசியது:
மைக்ரோ பைனான்ஸ் நிறுவ னங்கள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியன முத்ரா வங்கியிலிருந்து கடன் பெறலாம். இவை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும். இப்போதைக்கு முத்ரா வங்கியானது என்பிஎப்சி பிரிவில் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து என்பிஎப்சியாக உள்ள முத்ராவை வங்கியாக அரசு மாற்றும் என்றார்.
இப்போது சிட்பி வங்கியின் துணை அமைப்பாக செயல்படும். இரு வங்கிகளின் செயல்பாடுகள் எந்த வகையிலும் முரணாக அமையாது. இவையிரண்டுமே குறுந்தொழில் துறை வளர்ச்சிக்குப் பாடுபடும் என்று ஆதியா குறிப்பிட்டார்.
பொதுவாக வர்த்தக வங்கிகள் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் துறையினருக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இதனால் புறக்கணிக்கப்பட்ட சிறு, குறுந் தொழிலுக்கு உதவுவதற்காக முத்ரா தொடங்கப்பட்டுள்ளது. அத்தகை யோரை இலக்காகக் கொண்டு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணியை வங்கி மேற்கொள்ளும்.
சிறு குறுந்தொழிலுக்கான வரை யறை மற்றும் அவை எம்எப்ஐ-யில் பதிவு பெற்றிருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும். வட்டி விகிதத்தை முத்ரா வங்கியின் இயக்குநர் குழு முடிவு செய்யும். வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிஜி மேமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே சிட்பி வங்கியில் தலைமைப் பொது மேலாளராக பணியாற்றியவர்.