

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) 5 சதவீத தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 5 ஆயிரம் கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிர்வாக அமைப்புக்கு மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் 5 சதவீத பங்குச் சந்தை முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையானது பங்குச் சந்தை சார்ந்த இடிஎப்களில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடு குறித்த அறிவிக்கை இரண்டு மூன்று தினங் களுக்கு முன் வெளியிடப்பட்டதாக தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால் தெரிவித்தார்.
2014-15-ம் நிதி ஆண்டு வரையி லான காலத்தில் இபிஎப் நிதியில் சேர்ந்துள்ள மொத்தத் தொகை ரூ. 80 ஆயிரம் கோடியாகும்.
நடப்பு நிதி ஆண்டு இறுதியில் இது ரூ. 1 லட்சம் கோடியாக அதி கரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. மாதாந்திர சம்பள வரம்பு ரூ. 6,500-லிருந்து ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டதால் பிஎப் செலுத்து வோர் எண்ணிக்கை அதிகரிப்ப தோடு தொகையும் அதிகரிக்கும்.
முதலில் ஒரு சதவீத முதலீடாக தொடங்கப்பட்டு இந்த நிதி ஆண்டு இறுதியில் 5 சதவீத அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அகர்வால் கூறினார்.
5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என நிதி அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஆனால் பங்குச் சந்தையில் முதல் முறையாக முதலீடு செய்வதால், மிகவும் எச்சரிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
இது தொழிலாளர்களின் கடுமை யான உழைப்பின் மூலம் ஈட்டப்பட்ட தொகை, இதை மிக எளிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நாங்கள் நினைக்கவில்லை. இதனால் முதல் கட்டமாக 5 சதவீத அளவுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று அகர்வால் சுட்டிக் காட்டினார்.
இடிஎப் முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்ய உள்ளோம் என்றார். இதில் பொதுத்துறை நிறுவன இடிஎப்களில் எத்தனை சதவீதம் முதலீடு செய்வது என்பதை பிறகுதான் தீர்மானிக்க உள்ளோம் என்றார்.
இதற்கு முன்பு வரை 6 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட இபிஎப் நிதியம் தன் வசம் உள்ள நிதியை மத்திய, மாநில அரசு பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்து வந்தது.