

மத்தியில் பிரதமராகப் பொறுப் பேற்க உள்ள நரேந்திர மோடி, மிக அதிக அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டாம் என்று தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் இடம்பெற்றால் அது முடிவுகள் எடுப்பதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசில் 70 முதல் 80 அமைச்சர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசின் நிர்வாகம் எவ்வித இடையூறுமின்றி இயல்பாக நடக்க வேண்டும். அவ்விதம் நடக்க வேண்டுமெனில் அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இருக்கக் கூடாது. அமைச்சரவையில் பல அடுக்குகள் இருப்பது முடிவுகள் எடுப்பதை கால தாமதப்படுத்தும்.
குஜராத்தில் உள்ளதைப் போன்று ஒரே சீரான நடைமுறையை மத்திய அரசிலும் ஏற்படுத்தலாம் என்று ராணா கபூர் யோசனை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் யார் இடம்பெறப் போகிறார்கள், எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு இன்னமும் விடை காணப்படவில்லை. அமைச்சர் களைத் தேர்வு செய்வது என்பது மிகவும் சிரமமான வேலை.
கடந்த 10 மாதங்களாக பாஜக தலைவர்களுடன் பேசி வந்துள்ளதால் அவர்களது வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே தான் கருதியதாக கபூர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இம்மாதம்26-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். மோடியின் பிரதான கொள்கையே, குறைந்த அமைச்சர்களில் அதிகபட்ச நிர்வாகம் என்பதாகும்.
இதனால் மோடியின் அமைச்சரவை குறைவான அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்றே எதிர்பார்க் கப்படுகிறது. இதற்கு வசதியாக சில அமைச்சகங்களை ஒன்றிணைத்து அமைச்சர்களின் பொறுப்புகளை அதிகரிப்பார் என்று தெரிகிறது.
ஜிஎஸ்டி அமலாக்கம்
சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம், வெளிச் சந்தையில் கடன் திரட்டுவதற்கான (இசிபி) விதிகளை தளர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் முதலீடுகளை ஊக்குவிக்க சலுகை தர வேண்டும்.
மேலும் உற்பத்தி ஆலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு அதற்கான பரிசீலனையை விரைவுபடுத்தவேண்டும் என்றும் அசோசேம் வலியுறுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை முடுக்கிவிட ஒற்றைச் சாளர முறை கொண்டு வரப்பட வேண்டும். முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். நலிவடைந்து மூடப்பட்டுள்ள அரசு ஆலைகளை தனியார்மயமாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ. 1 லட்சம கோடி வருமானம் கிடைக்கும் என்றும் அசோசேம் சுட்டிக் காட்டியுள்ளது.
அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் உள்ள வரி விதி்ப்பு முறையை எளிமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்திய வரி விதிப்பு குறித்து வெளி நாட்டினருக்கு உள்ள அச்சம் நீங்கும். இதனால் அந்நிய முதலீடுகள் பெருகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பட்டியலில் நான் இல்லை: தீபக் பரேக்
நரேந்திர மோடி தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஹெச்.டி.எஃப்.சி.யின் தலைவர் தீபக் பரேக் நியமிக்கப்படலாம் என வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இது குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயத்தில் அரசாங்கம் எதாவது கேட்கும்பட்சத்தில் அதை செய்வதற்குத் தயாராக இருப்பதாகவே அவர் தெரிவித்தார். அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் நாட்டை வழி நடத்துகிறார்கள். அவர்கள்தான் யாரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். என்னிடம் கேட்கும் பட்சத்தில் என்ன முடியுமோ அதை செய்வேன் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆறு மாதத்தில் வெளியேறும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பாகவே செயல்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயத்தில் அமைச்சரகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்றும் அதனால்தான் தொழிலதிபர்கள் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்றும் கூறினார்.
நிதி அமைச்சராக அருண் ஜேட்லி அல்லது சுப்ரமணியன் சுவாமி நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாயின.