சீனத் தயாரிப்புகள் ஒரு போதும் எங்களுக்கு போட்டியல்ல- ஹேவல்ஸ் நிறுவனத் தலைவர் பேட்டி

சீனத் தயாரிப்புகள் ஒரு போதும் எங்களுக்கு போட்டியல்ல- ஹேவல்ஸ் நிறுவனத் தலைவர் பேட்டி
Updated on
2 min read

மின்சார பல்புகள் உள்ளிட்ட சீனத் தயாரிப்புகள் ஒரு போதும் எங்கள் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருந்தது கிடையாது என்று ஹேவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில் ராய் குப்தா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானாவில் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலையில் உருவான புதிய தயாரிப்புகளை செய்தியாளர்களிடம் பட்டியலிட்ட அவர் மேலும் கூறியது:

தொடக்கத்தில் சீன தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கினர். ஆனால் தரம், உழைக்கும் திறன் போன்றவை இல்லாததால் இப்போது தரமான பொருள்களை வாங்க முற்பட்டுள்ளனர். இதனால் சீன தயாரிப்புகள் இப்போது இந்திய சந்தையில் அச்சுறுத்தலாக இருக்கவில்லை.

அதிகம் விற்பனையாகும் நுகர் வோர் பொருள்களைப் (எப்எம்சிஜி) போல அதிகம் விற்பனையாகும் மின்சாதன பொருள்களாக (எப்எம் இஜி) பல்புகள், ஃபேன்கள் ஆகியன உள்ளன.

ஹேவல்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் தரமான தயாரிப்புகளை அளிப்பதே நோக்கமாகும். பொருளின் தரமும், நீடித்த உழைக்கும் தன்மையும்தான் எங்கள் தயாரிப்புகளை மக்களிடையே வெற்றி பெறச் செய்துள்ளது என்றார்.

மேக் இன் இந்தியா

பிரதமரின் மேக் இன் இந்தியா முழக்கத்தை நிறை வேற்றும் வகையில் இந்தியாவில் எரிசக்தி திறன் மிக்க பல்புகள் அதாவது எல்இடி-க்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தி யாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகப் பெரிய உற்பத்தி ஆலை இதுவாகும். இந்தியாவில் 11 ஆலைகளும் ஐரோப்பா, சீனாவில் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு மையங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) நடவடிக்கைக்கு மொத்த வருமா னத்தில் கட்டாயம் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு இப்போதுதான் உத்தர விட்டுள்ளது. ஆனால் தங்கள் நிறுவனம் அதற்கும் மேலாக செலவிட்டு வருவதாக கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி

மத்திய அரசு 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இத்தகைய நவீன நகர உருவாக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள ஹேவல்ஸ் ஆர்வமாக உள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த விளக்குகளைத் தயாரித்து அளிக்க உள்ளதாக அவர் கூறினார். ஸ்மார்ட் சிட்டிகளுக்காக விளக்குகளை வயரில்லா இணைப்பு மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய லோகோ

ஸ்டாண்டர்ட் நிறுவனத்தை ஹேவல்ஸ் கையகப்படுத்தி னாலும், அந்த பெயரிலேயே சில தயாரிப்புகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று கூறிய அவர் இதற்கான புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார்.

ஸ்டாண்டர்ட் தயாரிப்புகள் சில விற்பனையாளர்களிடமும் ஹேவல்ஸ் பிராண்டு பெயரிலான தயாரிப்புகள் சில விற்பனையாளர்களிடமும் கிடைக்கும். இரு தயாரிப்புகளும் வெவ்வேறு தரப்பு மக்களிடம் சென்றடைந்துள்ளன. இதனால் ஒருபோதும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக அமையாது என்ற அவர் ஸ்டாண்டர்ட் பெயரை மாற்றி ஹேவல்ஸ் பிராண்டில் தயாரிக்கும் உத்தேசம் எப்போதுமே கிடையாது என்றார்.

இஎஸ் 40 ரக ஃபேன்

ஃபேன் உற்பத்தியில் சமீபத்தில் ஈடுபட்டாலும் மின் சேமிப்பைக் கொண்டுள்ள தங்களது தயாரிப் புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இஎஸ் 40 எனும் புதிய ரக ஃபேனை அறிமுகப்படுத்திய அவர், இவை 30 சதவீதம் மின் சேமிக்கும் திறன் கொண்டவை என்றார். விரைவிலேயே 30 வாட்ஸ் திறனுடைய ஃபேன்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்விட்சுகள் தயாரிப்பு சந்தை யில் ஹேவல்ஸ் தயாரிப்புகள் ரூ.400 கோடி வருவாயை ஈட்டி யுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இந்தப் பிரிவின் மொத்த வர்த்தக சந்தை ரூ. 2,000 கோடி என்றார்.

சில்வேனியா

எல்இடி பல்புகளில் சில்வேனியா தயாரிப்புகள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படுபவை என்று குறிப்பிட்ட அனில் ராய் குப்தா, தங்கள் நிறுவன மொத்த வருமானத்தில் 40 சதவீதம் ஏற்றுமதி மூலம் கிடைப்பவை என்றார். தேவைப்பட்டால் பிற நிறுவனங்களைக் கையகப் படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதற்குரிய நிதி ஆதாரம் போதுமான அளவு இருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.

விரைவிலேயே இணையதளம் மூலமான வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாகக் குறிப்பிட்டார், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இயந்திர பராமரிப்புக்கு ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in