இணைய சமவாய்ப்பு: டிராய்க்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் குவிந்தன

இணைய சமவாய்ப்பு: டிராய்க்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் குவிந்தன
Updated on
2 min read

இணைய சமவாய்ப்பை வலியுறுத்தி (Net Neutrality) இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் குவிந்துள்ளன. இதுகுறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இணைய சமவாய்ப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஏப்ரல் 24-ம் தேதிக்கு முன்பு வரை பதிவு செய்யலாம் என கூறியிருந்தது. இது தொடர்பாக தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கப் போவதாகக் குறிப்பிட்டிருந்தது.

இணையத்தைக் காப்பாற்றுங் கள் என்ற கோஷத்தோடு 10 லட்சத்துக்கும் அதிகமான இணைய செய்திகள் டிராய்க்கு குவிந்துள்ளன.

இணையத்தைக் காப்பாற்றுங் கள் என்ற தன்னார்வ அமைப்பு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளது. இணையம் உபயோகிப்போர் இந்த அமைப்பின் இணையதள முகவரியை பதிவு செய்து அதன் மூலமாக டிராய்க்கு தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் 2.88 லட்சம் கையெழுத்துகள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளார். change.org எனும் இணையதளம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இணையதளத்தை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அணுக வழி செய்க என இவரது இணையதளம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் தானாக பிறந்தது, அது ஒருங்கிணைந்த தளம் மூலம் வளர்ச்சியடையும், இதற்கு யாரும் உரிமை கோர முடியாது, இதற்கு யாரும் காவலனாக இருக்கக் கூடாது என்று தனது மனுவில் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய சமவாய்ப்பு பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிறுவன முதலாளிகளிடம் இணையத்தை விற்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் அரசு சர்ச்சைக்கிடமில்லாத வகையில் இணையதளம் இயங்குவதற்கான நடைமுறைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதத் தொடக்கத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ஜீரோ எனும் புதிய சேவையைத் தொடங்கியது. இதில் இணையும் வாடிக்கையாளர்கள் மொபைல் அப்ளிகேஷனுக்கு கட்டணம் செலுத்திவிட்டு இணையதள சேவையைப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய அமைப்பான நாஸ்காம், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தைப் போல இணையதள சுதந்திரத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்தது. அத்துடன் டிராய் அமைப்புக்கு இரண்டு கருத்துகளை தெரிவித்தது. அதில் ஒன்று இணைய சமவாய்ப்பு பற்றியதாகும். மற்றொன்று இணையதளம் மூலமான சில செயலிகளான வைபர், வாட்ஸ் அப், ஸ்கைப் மற்றும் ஜி டாக் உள்ளிட்டவற்றுக்கானதாகும்.

இணைய சமவாய்ப்பின் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள், அதைக் கைக்கொள்வது மற்றும் அதை சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் கட்டுபடியாகும் விலையில் தொலைத் தொடர்பு கட்டமைப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். டிஜிட்டல் புரட்சிக்கு தொலைத் தொடர்பு கட்டமைப்புகள் அவசியம். ஆனால் இணைய சமவாய்ப்பு இந்த அடிப்படை தன்மையையே சிதைத்து விடுவதாக இருக்கிறது என்று நாஸ்காம் தலைவர் ரென்டலா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இணைய சமவாய்ப்பை பாதுகாக்க லட்சக்கணக்கான மக்களிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை அனைத்து சேவைகளும் இலவசமாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சேவ்திஇன்டர்நெட் எனும் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிகில் பாவா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 27-ல் ஆலோசனைக் குழு கூட்டம்

இணைய சமவாய்ப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பன்முக ஆலோசனைக் குழுக்களின் (எம்ஏஜி) கூட்டத்தை தொலைத் தொடர்புத்துறை (டிஓடி) நடத்த உள்ளது. இக்கூட்டம் ஏப்ரல் 27-ம் தேதி திங்களன்று நடைபெறும்.

இணைய சமவாய்ப்பு தொடர்பாக ஆலோசனை வழங்க ஒரு குழுவை தொலைத் தொடர்புத்துறை ஏற்படுத்தியுள்ளது. இக்குழு பன்முக ஆலோசனைக் குழுவுடன் (எம்ஏஜி) ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இக்கூட்டம் 27-ம் தேதி நடைபெறும் என எம்ஏஜி உறுப்பினர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் டிஓடி தெரிவித்துள்ளது.

மின்னணு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணைந்து எம்ஏஜி உருவாக்கப்பட்டது. இக்குழு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in