

கடன் பத்திரங்கள் மூலம் இந்திய நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் (2013-14) உள்நாட்டில் திரட்டிய நிதியின் அளவு ரூ. 42 ஆயிரம் கோடியாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அதிக தொகை இதுவரை திரட்டப்பட்டதில்லை.
கடந்த நிதி ஆண்டில் (2012-13) இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ. 16,982 கோடியாகும். இந்திய நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் மூலதன அதிகரிப்புக்காக இத்தொகை திரட்டப்பட்டுள்ளது. மொத்தம் 20 நிறுவனங்கள் இவ்விதம் நிதி திரட்டியுள்ளன. நிறுவனங்கள் வெளியிட்ட வரியில்லாத கடன் பத்திரங்கள் மூலம் இந்த அளவுக்கு நிதி திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இத்தொகையைத் திரட்டியுள்ளன.
நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மிக அதிகபட்சமாக ரூ. 29,700 கோடியைத் திரட்டியுள்ளன.முந்தைய ஆண்டு இது ரூ. 14,570 கோடியாக இருந்தது. தனியார் நிறுவனங்கள் திரட்டிய நிதி அளவு ரூ. 5,869 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ. 2,217 கோடியாக இருந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ. 6,814 கோடியாகும்.
முந்தைய நிதி ஆண்டில் இவை திரட்டிய தொகை வெறும் ரூ. 195 கோடி மட்டுமே. இந்தியா இன்ஃபிராஸ்டிரக்சர் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ. 6,878 கோடியை மிக அதிகபட்சமாக திரட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ரூ. 5,828 கோடியைத் திரட்டியுள்ளது. ஹெச்டிஎப்சி நிறுவனம் ரூ. 4,796 கோடியையும், ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ. 4,500 கோடியையும் திரட்டியுள்ளது.