Last Updated : 09 Apr, 2015 11:52 AM

 

Published : 09 Apr 2015 11:52 AM
Last Updated : 09 Apr 2015 11:52 AM

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்கு: ராமலிங்க ராஜு உட்பட 10 பேருக்கு 7 ஆண்டு சிறை

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் ரூ.7,000 கோடிக்கு முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அதன் நிறுவனர் பி.ராமலிங்க ராஜு (60), அவரது 2 சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஹைதராபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரரும் நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநருமான ராம ராஜு ஆகிய இருவருக்கும் தலா ரூ.5.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 8 பேருக்கும் தனித்தனியாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவன ஊழலாகக் கருதப்படும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். குற்ற சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபணமாகி உள்ளதாக தெரிவித்தார்.

ராமலிங்க ராஜு, முன்னாள் ஊழியர் ஜி.ராமகிருஷ்ணா ஆகி யோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 201-வது (குற்றங் களுக்கான ஆவணங்களை மறைத்தல்) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது.

ராஜுவின் மற்றொரு சகோதரர் பி.சூர்யநாராயண ராஜு மற்றும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் வி.எஸ்.பிரபாகர் குப்தா தவிர மற்ற 8 பேர் மீதும் ஐபிசி 467, 468, 471 மற்றும் 477ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மண்டல சிபிஐயின் காவல் துறை கண்காணிப்பாளர் வி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில் ரூ.7,136 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ள போதிலும், இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரம், இதன் மூலம் ராஜு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ரூ.1,900 கோடி லாபம் கிடைத்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராம ராஜு ஆகிய இருவர் மீதும் ஐபிசி 409 (நம்பிக்கை மோசடி) பிரிவின் கீழும் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது.

ராமலிங்க ராஜு தவிர மற்ற குற்றவாளிகளின் விவரம்: பி.ராம ராஜு, சத்யம் நிறுவன முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி வத்லமணி சீனிவாஸ், பிடபிள்யூசி நிறுவன முன்னாள் கணக்கு தணிக்கையாளர்கள் சுப்ரமணி கோபாலகிருஷ்ணன் மற்றும் டி.சீனிவாஸ், சூர்ய நாராயண ராஜு, முன்னாள் சத்யம் ஊழியர்கள் ஜி.ராமகிருஷ்ணா, டி.வெங்கட்பதி ராஜு மற்றும் சைலம், சத்யம் நிறுவன முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வி.எஸ்.பிரபாகர் குப்தா.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருந்த அனைவரும் ஜாமீனில் வெளியில் இருந்தனர். இந்நிலை யில், தீர்ப்பு விவரங்களை நீதிபதி படித்தபோது குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். தீர்ப்பை படித்து முடித்ததும், அனைவரையும் சிறை யில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார்.

வழக்கின் பின்னணி

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தின் லாபத்தை பல ஆண்டுகளாக மிகைப்படுத்திக் காட்டியதாக கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அதன் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜு தானாக முன்வந்து தெரிவித்தார்.

இதையடுத்து, நிறுவன பங்குதாரர்களில் சிலர் கொடுத்த புகாரின் பேரில், ஜனவரி 9-ம் தேதி ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு உள்ளிட்ட சிலரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது. சிபிஐ கேட்டுக் கொண்டதற் கிணங்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 226 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 3,137 ஆவணங் களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்யம் நிறுவனத்தை மஹிந்திரா அன் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம் வாங்கி யது குறிப்பிடத்தக்கது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வழக்கு கடந்து வந்த பாதை..

1987-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை தலைமையக மாகக் கொண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டிருந்த முன்னணி இந்திய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்தது.

இந்நிறுவனத்தின் லாபத்தை பல ஆண்டுகளாக மிகைப்படுத்திக் காட்டியதாக கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அதன் நிறுவனரும் அப் போதைய தலைவருமான ராமலிங்க ராஜு தாமாக முன்வந்து தெரிவித்தார்.

இதையடுத்து இந்நிறுவன பங்குதாரர்களில் சிலர் கொடுத்த புகாரின் பேரில் 2009-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ராமலிங்க ராஜுவை போலீஸார் கைது செய்தனர்.

2009 ஜனவரி 7 :

நிறுவன வரவு-செலவு கணக்கில் முறைகேடு செய்ததாக ராமலிங்க ராஜு தாமாக முன்வந்து தெரிவித்தார்.

2009 ஜனவரி 9 :

ஆந்திர போலீஸாரால் ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டார்.

2009 ஜனவரி 10 :

சத்யம் நிறுவன வாரியம் செயல்பட கம்பெனி சட்ட வாரியம் (சிஎல்பி) தடை விதித்தது. தீபக் பரேக், கிரண் கார்னிக் மற்றும் சி.அச்சுதன் ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்பட்டனர்.

2009 ஜனவரி 13 :

இந்த வழக்கை தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் விசாரிக்க அரசு உத்தரவிட்டது.

2009 பிப்ரவரி 2 :

சத்யம் நிறுவனத்தை வாங்க மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விருப்பம் தெரிவித்தது.

2009 பிப்ரவரி 5 :

அரசால் நியமிக்கப்பட்ட வாரியம் ஏ.எஸ்.மூர்த்தியை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது.

2009 பிப்ரவரி 11 :

சத்யம் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்பது குறித்து புதிய வாரியம் பரிசீலித்தது.

2009 பிப்ரவரி 17 :

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது.

2009 மார்ச் 6 :

சத்யம் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதி அளித்தது.

2009 ஏப்ரல் 4 :

முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2009 ஏப்ரல் 13 :

சத்யம் நிறுவனத்தை மஹிந்திரா குழுமத்தின் டெக் மஹிந்திரா கைப்பற்றியது.

2009 நவம்பர் :

சிபிஐ கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது.

2009 நவம்பர் 22 :

2-வது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2010 ஜனவரி 7 :

3-வது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2010 ஆகஸ்ட் 19 :

ராமலிங்க ராஜு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2010 நவம்பர் 8 :

நீதிபதி பிவிஎல்என் சக்ரவர்த்தி தலைமையில் விசாரணை தொடங்கியது. அப்போது முதல், தினமும் விசாரணை நடைபெற்றது.

2010 நவம்பர் 10 :

கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால் ராமலிங்க ராஜு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

2011 அக்டோபர் 25 :

விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

2011 நவம்பர் 2 :

விசாரணை தொடங்கியது.

2011 நவம்பர் 5 :

2-வது முறையாக ராமலிங்க ராஜு ஜாமீனில் விடுதலையானார்.

2014 டிசம்பர் :

விசாரணை முடிந்ததையடுத்து 2015, மார்ச் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

2015 மார்ச் 9 :

ஏப்ரல் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

2015 ஏப்ரல் 9 :

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு ஆகிய இருவருக்கும் தலா ரூ.5.5 கோடி அபராதமும் மற்றவர் களுக்கு தனித்தனியாக ரூ.25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x