செபி-எப்எம்சி இணைப்புக்கு பிறகு பிஎஸ்இ-ஐ பட்டியலிடுவது முடிவெடுக்கப்படும்: யு.கே.சின்ஹா தகவல்

செபி-எப்எம்சி இணைப்புக்கு பிறகு பிஎஸ்இ-ஐ பட்டியலிடுவது முடிவெடுக்கப்படும்: யு.கே.சின்ஹா தகவல்
Updated on
1 min read

இந்தியாவின் பழமையான பங்குச்சந்தையான பாம்பே பங்குச்சந்தையை (பி.எஸ்.இ.) பட்டியலிடுவது குறித்து இன்னும் ஆறு மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்று செபி தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்தார். இப்போது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் செபி மற்றும் கமாடிட்டி ஒழுங்கு முறை ஆணையம் எப்.எம்.சி. இணைப்பு குறித்த வேலைகள் நடந்து வருவதால் இணைப்புக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்றார். பாம்பே பங்குச்சந்தையில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து விஜய் மல்லையாவை நீக்குவது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு தனிப்பட்ட நிறுவனங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

2012-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு செபி அனுமதி கொடுத்திருந்தது. மூன்று வருடங்களுக்கு மேல் செயல்பாடுகள் இருகும் பட்சத்தில் பங்குச்சந்தைகள் ஐபிஓ வெளியிடலாம் என்று செபி தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றன. அதனால் ஆறு மாதங்களுக்குள் இது குறித்து முடிவெடுக்க முடியும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் பங்குச்சந்தைகள் சில ஒழுங்கு முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், புரோக்கர்களை வழிநடத்துதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்கின்றன. தற்போதைய நடைமுறை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

செபி எப்எம்சி இணைப்புக்கு அரசாங்கம் தேதியை விரைவில் அறிவிக்கும். அதற்கிடையில் இந்த இரண்டு அமைப்புகளும் அதற்கான வேலையை செய்துவருகின்றன. இதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, பிரச்சினையை ஆராய்ந்து வருகிறோம். இருந்தாலும் இன்னும் பணியாளர்கள் தேவை என்றார் சின்ஹா.

பெண் இயக்குநர்களை நியமிக்காத நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை (ஏப் 1, 2015) நியமிக்கவில்லை. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பெண் இயக்குநர்களை நியமிக்கவில்லை என்றால் கடுமையான தண்டனை மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படும். ஆனால் அதற்கான சூழ்நிலை உருவாகாது என்று நம்புகிறேன்.

நகராட்சி பத்திரங்கள், எலெக்ட்ரானிக் ஐபிஓ உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று சின்ஹா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in