

தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் நிறுவனம் இந்தியாவின் தர மதிப்பீடு உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கட்டுமானத் திட்டங்கள் செயல்படுவதை பொறுத்து 12-18 மாதங்களில் இந்தியாவின் தரமதிப்பீடு உயரும் என்று மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல 15 வங்கிகளின் எதிர்காலமும் சாதகமாக இருக்கும் என்று முடீ’ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதால் வங்கி பங்குகள் நேற்று 6 சதவீதம் வரை உயர்ந்தன.
இதில் 12 பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மூன்று தனியார் வங்கிகளும் அடங்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கு 6 சதவீதம் உயர்ந்தது, இண்டஸ்இந்த் வங்கி (4.63%), கோடக் மஹிந்திரா வங்கி (3.15%), ஆக்ஸிஸ் வங்கி (2.88%) யெஸ் வங்கி (2.67%) எஸ்.பி.ஐ பங்கு 2.50 சதவீதமும் உயர்ந்தன.
மேலும் வங்கித்துறை குறியீடு 2.58 சதவீதம் உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 12 குறியீடுகளில் வங்கித்துறை குறியீடு அதிகம் உயர்ந்தது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வங்கி பங்குகளில் செய்யும் முதலீடு தொடர்ந்து ஆறு மாதமாக உயர்ந்து வந்த நிலையில் மார்ச் மாதம் சரிந்து முடிந்தது. மார்ச் மாதம் முடிவில் 73,575 கோடி ரூபாய் மட்டுமே வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்தன. ஆனால் இதற்கு முந்தைய மாதத்தில் அதிகபட்சமாக 77,805 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.