

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் பிரான்சைச் சேர்ந்த அல்காடெல் லூசென்ட் நிறுவனத் தைக் கையகப்படுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனத்துக்கு பெரும் சவாலாக விளங்கி வந்த பிரான்ஸ் நாட்டின் அல்காடெல் நிறுவனம் தற்போது நோக்கியா வசமாகியுள்ளது. 1,560 கோடி யூரோ அல்லது 1,660 கோடி டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறை நிறுவன கையகப்படுத்துதலில் அதிக தொகை கைமாறியது இதுவே முதல் முறையாகும். அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தின் பங்கு களை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள் 0.55 பங்குக்கு ஒரு பங்கு தொகையை நோக்கியா நிறு வனத்திடமிருந்து பெற்றுள்ளனர்.
இருநிறுவனமும் இணைந்ததில் நோக்கியா பங்குதாரர்கள் வசம் 66.5 சதவீதம் இருக்கும். பிரான்சின் அல்காடெல் லூசென்ட் பங்குதாரர்கள் வசம் 33.5 சதவீதப் பங்குகள் இருக்கும்.
இரு நிறுவனங்களும் இணைந்ததில் பணியாளர்களின் எண்ணிக்கை 1.14 லட்சமாக உயர்ந்துள்ளது. விற்பனை வருமானம் 2,600 கோடி யூரோக்களாகும்.
புதிய நிறுவனம் நோக்கியா கார்ப்பரேஷன் என்ற பெயரில் பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். இரு நிறுவனங்களும் இணைந்ததன் மூலம் ஸ்வீடனின் எரிக்சன் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்துக்கு நோக்கியா முன்னேறியுள்ளது.
இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தடையற்ற தொலைத்தொடர்பை வழங்குவதே இலக்கு என்று நோக்கியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.