வணிக நூலகம்: வெற்றியின் முதல் படி

வணிக நூலகம்: வெற்றியின் முதல் படி
Updated on
3 min read

இன்னோசைட் (Innosight) என்னும் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ஸ்காட் டி ஆண்டனி எழுதியுள்ள இந்த புத்தகத்தில் காகிதத்தில் இருப்பதை செயலாக மாற்றுவதற்கு ஏராளமான கருத்துகளை வழங்கியுள்ளார். அவரது கூற்றுப்படி மிகச் சரியான எண்ணம் என்று எதுவும் கிடையாது. மாறாக சோதனை மூலம் பிழைகளைத் தவிர்க்க சில எண்ணங்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

கருத்து, காகிதத்தில், ஏறி காகித வரைபடம் உற்பத்தியான பொருளாக சந்தையைச் சேரும் பொழுது தோல்விகள் ஏராளம். சில நேரங்களில் வெற்றிக்கான வாய்ப்புகள் கூடும். எந்த ஒரு மிகப் பெரிய புதிய கருத்தும் வெற்றியையும் தோல்வியையும் சமமாக சந்திக்கும். அப்போது நிலைத்தன்மை வெற்றிக்கு வழிக்காட்டும். நிலையில்லாத் தன்மை தோல்வியை தழுவிக்கொள்ளும்.

புதிய தொழில்முனைவோர்கள் நிலையில்லா தன்மையை குறைத்து நிலையான தன்மையை நிறுத்தி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். இதைத்தான் இந்நூலின் ஆசிரியர் தலைப்பாக ‘சிக்கலான தூரத்தின் முதல் மைல் கல்’ என்று குறிப்பிடுகிறார். முறையான அணுகுமுறை இல்லாத புதிய முயற்சிகள் இரண்டு மிகப் பெரிய சிக்கல்களை அல்லது தோல்விகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஊக்கம் தவிர்த்து, எளிதில் இலக்குகளை அடையும் மனப்பான்மையை இழத்தல்.

தவறான, மிக அதிகமான பணம் மற்றும் நேரத்தை செலவுச் செய்து மிகச் சரியாக, மிக அதிக குறைபாடு உடைய உத்திகளை விரட்டிச் செல்லுதல்.

இந்த சிக்கலான நேரத்தில் முதல் மைல் கல்லைக் கடப்பதற்குள் பெரும்பான்மையான புதிய முயற்சிகள் வழுக்கி விழுவதற்கான சாத்திய கூறாக கீழ் கண்டவற்றை கூறலாம்.

சந்தைப்படுத்தும் வாய்ப்பு இல்லாத ஒன்றை வலிய பின் தொடர்தல்.

புதுமையைக் காண்பவர்கள் வெகு எளிதில் தங்கள் சக்தியை செலவழித்து விடுகிறார்கள். மிகப் பெரும்பான்மையான புதிய முயற்சியில் நேரத்தையும், பணத்தையும் மிக குறைவாக மதிப்பிட்டு, லாபத்திற்கு மண் கோபுரம் கட்டுகிறார்கள். எதிர் பார்த்ததை விட அதிக காலம் எடுத்து அதிக செலவை விழுங்கி உள்ளதற்கான உதாரணங்கள் ஏராளம்.

பொருளாதார மற்றும் வியாபார உத்திகளை புறம் தள்ளி, அனுபவம் இல்லாமல் தோல்வியை மட்டுமே தழுவுகிறார்கள்.

பெரு நிறுவனங்கள் நிலையில்லாத நேரத்தில் முதல் மைல் கல்லை அவர்கள் கடப்பதே இல்லை. மாறாக கூட்ட அறைகளில் காகித கற்றைகளோடு இயந்திர கதியில் இயங்கி வெற்றிக்கான வாய்ப்பை அடியோடு இழக்கிறார்கள்.

புதிய முயற்சியின் மிகப்பெரிய தத்துவமே பிழைகளை சோதனை முறையில் களைவதாகும். அவ்வாறு களையும் பொழுது சோதனை முறையில் வெற்றிக்கு படிக்கட்டுகளை கட்டுகிறார்கள். அந்த படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக கடக்கும் பொழுது வெற்றியின் உச்சிக்கு செல்கிறார்கள். புது முறை காண்பவர்கள் சோதனை முறைகளை அதிகரித்தால் மட்டுமே பிழைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். அவ்வாறு சோதனைகளை மேற்கொள்ளும் போது அவைகளை விஞ்ஞான முறைப்படி மேற்கொள்ளுதல் அவசியம். மாறாக, கனவு உலக எண்ணங்களும், மனதில் தோன்றும் மெலிதான எண்ண ஓட்டங்களும், வரைமுறையில்லாத வண்ணக் கனவுகளும், புது முறை காணலுக்கு ஒவ்வாது. அவைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விஞ்ஞான முறைப்படி சோதனைகளை மேற்கொள்ளும் பொழுது கருத்துகளை சோதித்து, நிலையில்லா தன்மையைக் கண்டறிந்து, தவறுகளைத் தவிர்த்து, குறைபாடுகளில் இருந்து கற்றறிந்து, கருதுகோள்களை நிறுவ வேண்டும். நான்கு கட்ட நிகழ்வுகளாக நிலையில்லா தன்மையைக் குறைக்கவும், புதுமை காணலில் அதீத வெற்றி அடையவும், சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மறைந்து கிடக்கும் அனுமானங்களை வெளிக்கொணர்ந்து பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகளை பல்வேறு கோணங் களில் மதிப்பீடு செய்ய வேண்டும்.

மிகவும் சிக்கலான நிலையில்லாத உத்திகளில் கவனம் தேவை.

அதீத சோதனைகளுக்கு பின் அவைகளைப் பின்பற்ற வேண்டும்.

புதிய முயற்சி காண்பவர்கள் தேவையில்லாத கவர்ச்சிப் படிவங்களையும், மாற்ற முடியாத மனபாங்குகளையும் தவிர்த்து கீழ் கண்ட எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

எண்ணங்களை வடிவமைத்தல் எண்ணங்களை படமாக மாற்றி ஒரே பக்கத்தில் அதன் வெவ்வேறு வகையான காரணிகளை விளக்குதல்.

வியாபார திரைச்சீலை வாடிக்கையாளர்கள், பொருட்களை விற்பவர்கள், விற்கும் வழிமுறைகள் ஆகியவைகளை ஒரே பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

வியாபார திட்டம் - பத்து, பதினைந்து பக்கங்களுக்குள் செய்ய வேண்டிய செயல்களையும், செலவுகளையும், தாண்ட வேண்டிய தடைக்கற்களையும் பதிவு செய்ய வேண்டும்.

கீழ்கண்ட வழிமுறைகள் மிகவும் சிக்கலான நிலையற்ற தன்மையை சோதித்து பார்க்க பெரிதும் உதவும்.

எந்த ஒரு முயற்சிக்கும் ஆழ உழுத சிலரையும், அகல உழும் சிலரையும் சேர்த்து குழுக்களாக வடிவமைக்க வேண்டும்.

எங்கே எப்படி தவறு நிகழ்ந்தது என்று அறிந்து கொள்ளும் முகமாக கருதுகோள்களை சோதித்துப்பார்த்து முடிவுகளை அலசவேண்டும்.

குளிரூட்டப்பட்ட கூட்ட அறைகளிலே, காகித கற்றைகளுக்கு நடுவே, கனவு உலக சஞ்சாரம் தவிர்த்து சந்தை வெளிகளில் சூட்டோடு சூடாக, சூட்டை உணர்ந்து, எண்ணங்களை எதிர்ப்பார்ப்புகளோடு இணைக்க வேண்டும்.

முதலீடுகளைக் குறைத்து, நெகிழ்வு தன்மைகளை அதிகரித்து திட்டங்களை தீட்டினால் பின்னாளில் ஏற்படும் குளறுபடிகளை களைந்து நேர்கோட்டில் செல்லலாம்.

திட்டம் தீட்டும் பொழுது வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாமல் குறைபாடுகளையும், இடைவெளிகளையும் நிரவுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும்.

சோதனைகளை மேற்கொள்ளும் பொழுது, காகிதத்தில் குறிப்பதை போலவோ, தொய்வான நடவடிக்கைகளாலோ வெற்றிகாண இயலாது. மாறாக, நிகழ்வுகள் மற்றும் செயல்களின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். வேகமாக, தொடர்ந்து, முக்கியமான நிகழ்வுகளை பதிவு செய்து எதிர்பார்ப்புக்கு எதிர் மாறாக இருப்பின் அவைகளை அத்தோடு விட்டு விட்டு புதிய பாதையில் புதிய பயணங்களை தொடர்ந்து, சோதனைகளில் வெற்றி அடைய செய்யவேண்டும்.

இந்த புத்தகம் எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதற்கான வெற்றியின் முதல் மைல் கல்லில் ஏற்படும் தோல்விகள், தடைகள், குழப்பங்கள், தாழ்வு மனப்பான்மை ஆகியவைகளை களைந்து வெற்றிக்கு வழிக்காட்டும் கையேடு. தொழில் முனைவோர்க்கும், பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சேர உதவும்.

பெரும்பாலும் அந்த முதல் மைல் தூரத்தில் வெற்றி அடைபவர்கள் பயணத்தை தொடர்ந்து, பெரும் வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம். அந்த முதல் மைல் தூரத்தில் ஏற்படும் தடைகற்களை அப்புறப்படுத்த இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள உத்திகளும், உபகரணங்களும் செயலை எளிதாக்கும். தொழில்முனைவோர் முதல் மைல் தூரத்தில் பயணம் செய்பவர்களும், முதல் மைல் தூரத்தின் உள்ளே நுழைபவர்களும் இந்த புத்தகத்தை ஒரு முறை படித்தால் உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் மாற்றம் உறுதி.

rvenkatapathy@rediffmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in