Published : 02 Apr 2015 10:44 AM
Last Updated : 02 Apr 2015 10:44 AM

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்வு

நடப்பு நிதியாண்டின் முதல் நாளான நேற்று சந்தை 1 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. ஆர்பிஐ தனது நிதிக் கொள்கையை 7ம் தேதி அறிவிக்க உள்ள நிலையில் வங்கித்துறை பங்குகள் ஏற்றமாக வர்த்தகம் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 302 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28260 புள்ளிகள் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8586 புள்ளிகளில் முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் 2-4 சதவீதம் வரை ஏற்றத்தைக் கண்டன.

பேங்க் நிப்டி, பார்மா, ரியாலிட்டி, எப்எம்சிஜி மற்றும் கேபிடல் கூட்ஸ் பங்குகள் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. நேற்றைய வர்த்தகத்தில் சன் பார்மா பங்குகள் 5.59 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,081.15 என்கிற விலையில் வர்த்தகம் ஆனது.

சன் பார்மாவோடு இணைப்புக்கு முன்னரான கடைசி வர்த்தக தினத்தில் ரான்பாக்சி நிறுவனப் பங்குகளும் இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது.

நேற்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 5.23%, இண்டஸ்இந்த் வங்கி 4.43%, யெஸ் பேங்க் 3.92%, கோட்டக் மஹிந்திரா 3.64% பங்குகள் ஏற்றம் கண்டன. ஹெச்சிஎல் -4.03%, இன்போசிஸ் -2%, பிஹெச்இஎல் -1.98%, மாருதி சுஸூகி -1.42%, பிபிசிஎல் -0.81% பங்குகள் இறக்கத்தைக் கண்டன.

பேங்க் நிப்டி பங்குகள் நேற்று எதிர்பாராத வகையில் 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. ஆர்பிஐ அடுத்த வாரத்தில் தனது நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ள நிலையில் வங்கிப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. ஆனால் ஆர்பிஐ அறிவிக்க உள்ள நிதிக் கொள்கையில் வட்டி விகிதங்களில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தைகளும் நேற்று ஏற்றமாகவே இருந்தது. ஷாங்காய் சந்தை 1.7 சதவீதமும், ஹாங்காங் சந்தை 0.7 சதவீதமும், ஐரோப்பிய சந்தைகள் 0.6-1 சதவீதமும் ஏற்றமாக வர்த்தகம் கண்டன.

மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி காரணமாக இன்றும் நாளையும் சந்தை விடுமுறை என்பதால், அடுத்த வாரத்தில்தான் வர்த்தகம் மீண்டும் தொடங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x