

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது. கடந்த வாரம் அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்தற்கு பிறகு வீட்டுக்கடனுக்கான வட்டியை எஸ்.பி.ஐ. குறைத்திருக்கிறது.
புதிய வட்டி விகிதம் இன்று முதல் (ஏப்ரல் 13) அமலுக்கு வருகிறது. பெண் வாடிக்கையாளர்களுக்கு 9.85 சதவீத வட்டியிலும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு 9.90 சதவீத வட்டியிலும் வீட்டுக்கடன் கிடைக்கும். இதற்கு முன்பு பெண்களுக்கு 10.10 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 10.15 சதவீதமாக வட்டி விகிதம் இருந்தது.
இந்த வட்டி விகிதம் புதிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இ.எம்.ஐ. குறைந்திருக்கும். அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீத அளவுக்கு எஸ்.பி.ஐ. குறைத்தது.