

சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்றவாறு பொதுத் துறை இ.டி.எப்.களில் (சிபிஎஸ்இ இடிஎப்) மாற்றம் கொண்டு வர பங்குவிலக்கல் துறை திட்டமிட்டு வருகிறது.
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 10 பொதுத்துறை நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு பொதுத்துறை இ.டி.எப். கொண்டு வரப்பட்டது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 ஆகும்.
“இந்த இ.டி.எப்-ல் இருக்கும் பங்குகளை மாற்றும் திட்டம் இல்லை. யூனிட் அளவினை குறைத்து சிறுமுதலீட்டாளர் முதலீடு செய்வதற்கு வசதியாக மாற்றும் திட்டம் இருக்கிறது. இது தவிர சிறுமுதலீட்டாளர்களுக்கு ஏதுவாக இன்னும் சில மாற்றங்களும் செய்யப்படும். மாற்றங்களை செய்வதற்கு முன்பு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெறவேண்டும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பொதுத்துறை இடிஎப்-ல் ஓ.என்.ஜி.சி, கெயில் இந்தியா, கோல் இந்தியா, இந்தியன் ஆயில், ஆயில் இந்தியா, பவர் பைனான்ஸ் கார்ப், ஆர்.இ.சி., கன்டெயினர் கார்ப், இன்ஜினீயர்ஸ் இந்தியா மற்றும் பாரத் எலெக்ட்ரானிஸ் ஆகிய பங்குகள் உள்ளன.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இந்த இ.டி.எப்.யை நிர்வாகம் செய்கிறது. இதில் சிறுமுதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வரையும் அதிகபட்சம் 10 லட்ச ரூபாய் வரையும் முதலீடு செய்ய முடியும்.