

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் இப்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்று புதிதாக இத்துறைக்கு பொறுப்பேற்கும் அமைச்சருக்கு அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம். அப்போதுதான் வெளிநாட்டினருக்கு கொள்கை ஸ்திரமாக உள்ளது என்ற நம்பிக்கை உருவாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்lதிருந்தது. இதைக் கருத்தில் கொண்டே தனக்குப் பிறகு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளவருக்கு அறிவுறுத்தும் வகையில் ஆனந்த் சர்மா குறிப்பு எழுதி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகள் சமுகமாகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இதுபோன்று குறிப்பு எழுதி வைத்தார். அதே மரபை இப்போது ஆனந்த் சர்மாவும் கடைப்பிடித்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.