

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் தங்கத்தின் நுகர்வு இந்தியாவில் குறைந்தது. கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் குறைந்து 190.3 டன்னாக இருந்தது.
கடந்த வருடம் இதே காலத் தில் தங்கத்தின் நுகர்வு 257.50 டன்னாக இருந்தது என உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள்தான் தங்கத்தின் தேவை குறைந்ததற்கு காரணம்.
ரூபாய் மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது 33 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 73,183.60 கோடி ரூபாய் அள வுக்கு இருந்த நுகர்வு, இப்போது 48,853 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
நடப்புக் கணக்கு பற்றாக் குறையை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை கள்தான் தங்கத்தின் தேவை குறைவதற்கு காரணம் என உலக தங்க கவுன்சில் (இந்தியா) நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.
இருந்தாலும் கடத்தல் மூலம் தங்கம் இந்தியாவுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறது என்றார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கத்தின் நுகர்வு 13 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது அங்கிருக்கும் இந்தியர்கள் தங்கத்தை வாங்கி அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மறுசுழற்சி செய்யப்படும் தங்கத்தின் அளவு சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 21 டன்னாக இருந்த மறுசுழற்சி தங்கம் இப்போது 21.3 டன்னாக அதிகரித்திருக்கிறது.
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு அமைய விருக்கிறது. வணிகத்திற்கு சாதகமான நிலைப்பாடு எடுக்கும் மத்திய அரசு தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
ஆனால் சர்வதேச அளவில் தங்கத்தின் நுகர்வில் மாற்றம் பெரிதாக இல்லை. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,077 டன்னாக இருந்த தங்க நுகர்வு இப்போது 1,075 டன்னாக இருக்கிறது.
2014-ம் ஆண்டு தங்கத்தின் தேவை 900 முதல் 1000 டன்னாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.