

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நேற்று புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபல மாடலான பல்சர் ரகத்தில் புதிய மாடலை பல்சர் அட்வெஞ்சர் ஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகப் படுத்தியுள்ளது.
டெல்லியில் இதன் விற்பனையக விலை ரூ.79 ஆயிரம் முதல் ரூ.91,550 வரையாகும். போக்கு வரத்து நெரிசலில் எளிதாக செல்வதற்கேற்ப அதிக உந்து சக்தியுடன் இது தயாரிக்கப்பட் டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் எரிக் வாஸ் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பு, தேவை இவற்றுக்கேற்ப தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்கிறது. ஸ்போர்ட்ஸ் பிரியர் களுக்காக இரு மாடல்களில் இவை வெளிவந்துள்ளன. பல்சர் ஏஎஸ் 200 மற்றும் பல்சர் ஏஎஸ் 150 என்ற பெயரில் இவை அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இதில் பல்சர் ஏஎஸ் 200 மோட்டார் சைக்கிள் 199.5 சிசி திறன் கொண்டது. அத்துடன் இரட்டை ஸ்பார்க் பிளக் வசதியோடு வந்துள்ளது. பல்சர் ஏஎஸ் 150 மோட்டார் சைக்கிள் 149.5 சிசி திறனுடன் இரட்டை ஸ்பார்க் பிளக் வசதியுடன் 4 வால்வு மற்றும் டிடிஎஸ்ஐ இன்ஜினுடன் இது வந்துள்ளது. பல்சர் ரக மாடல் பைக்குகள் மாதத்துக்கு 57 ஆயிரம் விற்பனையாவதாக அவர் தெரிவித்தார்.