

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட் டத்தை உலக வங்கி பாராட்டியுள் ளது. அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் வரவேற்கத்தகுந்த முயற்சி என்று உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) மற்றும் உலக வங்கி கூட்டாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம், இதுவரையில் 14 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்றார்.
அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற இலக்கை 2020-க்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா மிகச் சிறப்பாக செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைப்பதன் மூலம் வறுமை அகலும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மிகுந்த தொலைநோக்கு சிந்தனையுடன் பிரதமர் மோடி மற்றும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் செயல்படுவதாக கிம் பாராட்டினார்.
இந்த மாநாட்டில் பேசிய எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ்தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு களில் 49 சதவீதம் பெண்களுக் கானது என்று குறிப்பிட்டார்.