ஏர் ஏசியா விமான சேவை ஜூன் 12-ல் தொடக்கம்

ஏர் ஏசியா விமான சேவை ஜூன் 12-ல் தொடக்கம்
Updated on
1 min read

ஏர் ஏசியா விமான சேவை நிறுவனம் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் உள்நாட்டு சேவையைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு சேவையைத் தொடங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டோனி ஃபெர்ணான்டஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எங்கிருந்து விமான சேவை தொடங்குகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சென்னையிலிருந்து தனது சேவையை இந்நிறுவனம் தொடங்கும் என தெரிகிறது.

குறைந்த கட்டண விமான சேவையை செயல்படுத்தும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் அருண் பாட்டியாவின் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டுத் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு ரூ. 81 கோடியாகும். விமான சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி கேட்டு 9 மாதங்களுக்குப் பிறகே கிடைத்துள்ளது.

ஏர் ஏசியா நிறுவனம் தனது செயல்பாட்டைத் தொடங்குவதற்கான அனுமதியை மே 7-ம் தேதி பெற்றது. தற்போது இந்நிறுவனத்துக்கு ஒரு விமானம் உள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கை மூன்றாக உயரும். இந்த ஆண்டு இறுதிக்குள் 11 விமானங்களை செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே குறைந்த கட்டண சேவையில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர ஜெட் ஏர்வேஸ் மற்றும் அரசின் ஏர் இந்தியா நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்குப் போட்டியாக ஏர் ஏசியா விமான சேவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ரூபாய் கட்டண சேவையை ஏர் ஏசியா அறிமுகப்படுத்துமா? என்று கேட்டதற்கு இதுபோன்ற ஜாலங்களை ஏர் ஏசியா செய்யாது என்று இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி மிது சாண்டில்யா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களை இணைப்பதற்கான விமான சேவையை அளிக்கப் போவதாக இந்நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in