Published : 13 Apr 2015 11:44 AM
Last Updated : 13 Apr 2015 11:44 AM

முன்னேற்றத்துக்கான ஆயிரத்தியொரு ஐடியாக்கள்!

வேலையில் முன்னேற்றம் காண்பது எப்படி என்பது குறித்து பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஒரு ஒழுங்குடன் முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்து கடைசி அத்தியாயம் வரை படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு என்பது (1001 ஐடியாக்கள் இருந்தாலும்) வடிவமைப்பில் எந்த ஒரு அத்தியாயத்தையும் நேரடியாகப் படித்தாலே பலன் கிடைக்கும் அளவுக்கு இருக்கின்றது என்பதுதான்.

அதிலும் முக்கியமாக புத்தகத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள் புல்லட் பாயிண்ட்களாக பெரும்பான்மையாக இருப்பது மிகவும் சுலபமாக படிப்பதற்கு உதவுகின்றது. மனித வாழ்வில் ஒரு விநோதம் இருக்கின்றது. பெரும்பாலான சமயங்களில் நம்மைப் பற்றி நாமே சரிவர புரிந்துகொள்வதில்லை. நம்மை நாமே நம்பி நடப்பதும் இல்லை. இப்படியே வாழ்நாளில் பாதிக்கும் மேல் இருந்து பழகிவிடும் நாம், நாற்பது வயதுக்குமேல் நமக்கு நாமே, நம்மாலேயே கைவிடப்பட்ட அகதியாகி விடுகின்றோம் என்ற பழமொழியைச் சொல்லி ஆரம்பிக்கின்றார் ஆசிரியர்.

வேலை! வேலை! வேலை!

பொதுவாக பலரும் இன்றைக்கு வாழ்வையும் வேலையையும் எப்படி பிரிப்பது என்றே போராடுகின்றோம். இப்படி நினைப்பதே தவறான வழி. எப்படி என்னுடைய வாழ்க்கையையும் வேலையையும் சரியான அளவில் இணைக்கப்போகின்றேன் என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். சுலபமாக உங்களுக்கு விடை கிடைக்கும் என்கின்றார். இதற்கு எதிர்பதமாக சிலரும் இருக்கின்றனர். அது மிகவும் சுவையானது. பார்க்கும் வேலையில் சிலர் சுலபமாக செய்யும் தவறு ஒன்று உண்டு. விளையாட்டில் பயிற்சி எடுப்பவர்களுக்கு அவர்களுடைய பயிற்சியாளர் ஒன்றை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்வார். ப்ராக்டிஸ் சரிவர செய்யாமல் ஏமாற்றுவது என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது என்பதுதான் அது.

இதேதான் பணியிடத்திலும் சிலருக்கு நடக்கும். சில சமயம் நம்முடைய வேலை அசைக்க முடியாததாக (ஜாப் செக்யூரிட்டி) இருக்கும். ரொம்பவும் கெத்தாக திரிவோம். நம்மால் சுலபத்தில் செய்ய முடிந்ததை மட்டுமே செய்வோம். அதற்கு மேல் ஒரு துரும்பைக்கூட கிள்ளி போட மாட்டோம். புதிதாக எதையும் பயில மாட்டோம். கடைசியில் ஏதோ ஒரு காரணத்தால் பார்க்கும் வேலை போகும்போது நமக்கென்று எதுவுமே தனித்தன்மையுடன் இருக்காது. புதிய வேலை கிடைக்காமல் திண்டாடுவோம் என்று ஊசிமுனை போன்ற கருத்தைச் சொல்கின்றார்.

வெற்றி பயம்!

தன்னம்பிக்கை என்றால் என்ன? தோற்போம் என பெரும்பான்மையானவர்கள் நினைக்கும்போது ஜெயிப்போம் என நினைப்பது. இதெல்லாம் தேறாது என பலர் சொல்லும் போது தேறி காண்பிப்பேன் என செயல்படுவது. பிரச்சினை என எல்லோரும் ஒதுங்கும் போது பிரச்சினையில்தான் வாய்ப்பு இருக்கின்றது என்று துணிந்து இறங்குவது என்பதுதானே! நினைப்புதான் தன்னம்பிக்கை என்பதற்கான பல வாதங்களை வைக்கின்றார் ஆசிரியர்.

உலகத்தையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் சுலபத்தில் மாற்ற முடியாது. உங்கள் நினைப்பையும், எண்ணங்களையும், செயலையும் உங்களால் சுலபத்தில் மாற்ற முடியும். வெற்றிகரமான மனிதனாக திகழ முதலில் நாம் வெற்றிபெற தகுதியானவர்தான் என நினைக்க ஆரம்பியுங்கள் என்கிறார். என் மீது எனக்கு என்ன முயற்சித்தாலும் நம்பிக்கை வரமாட்டேன் என்கின்றது என்கிறீர்களா? அது போன்ற சூழ்நிலையில் உங்களை எத்தனை பேர் நம்புகின்றார்கள் என்று பட்டியலிடுங்கள் என்கின்றார். அடுத்தவர் நம்மை எதனால் நம்புகின்றார் என்று சிந்தியுங்கள். அவர் கண்ணில் படும் உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு புலப்படும்.

நம்பிக்கையின்மை என்பது கொடுமையின் உச்சம். நம்பிக்கை இல்லாவிட்டால் முன்னேற்றத்திற்கு தேவைப்படும் எனர்ஜி கிடைக்காது. அதனாலேயே எதையும் தொடர்ந்து முயற்சிக்க மாட்டோம் என்று ஆணித்தரமாக சொல்கின்றார். தோல்வி பயம் என்ற ஒன்று இருப்பதைப் போல் வெற்றி பயம் என்ற ஒன்றும் இருக்கின்றது. அது தோல்வி பயத்தை விட மோசமானது. நான் ஜெயிக்கத் தகுதியுள்ளவனா என்று ஜெயித்த பிறகுகூட அதனை ஏற்றுக் கொள்ளாதிருப்பது. இந்த வகை பயம் தொடர் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைக்கல் என்கின்றார்.

தொலைநோக்கு தேவை!

கிடைக்கும் நேரத்தில் எக்கச்சக்க விஷயத்தை செய்கின்றேன் பேர்வழி என்று முயற்சி செய்கின்றோம். கடைசியில் என்னவாகின்றது? எதையும் ரசித்துச் செய்வதில்லை. என்னவோ ஏதோ என்றே செய்கின்றோம். ஆண்டவனோ, ஆட்சியாளரோ, சாமானியரோ உலகத்தில் அனைவரையும் சமமாக மதிக்கும் ஒரே விஷயம் நேரம் மட்டுமே என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள் என்கின்றார். நம்மில் அதிகமானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா? ஒரு வருடத்தில் எதையெல்லாம் முடிப்பீர்கள் என்று கேட்டால் முடிக்கவே முடியாத பல விஷயங்களை எல்லாம் சேர்த்துச் சொல்வோம். அதே சமயம் நீங்கள் பத்து வருடத்தில் எதையெல்லாம் முடிப்பீர்கள் என்று கேட்டால் மிகவும் குறைந்த விஷயங்களையே சொல்வோம். நீண்ட நாட்களுக்கான நமது திட்டம் மிக குறைவானதாகவும், குறுகிய காலத்திற்கான நமது திட்டம் மிக அதிகமானதாகவும் இருக்கின்றது. இந்தத் தவறை உணர்ந்து கொள்ளுங்கள். தொலைநோக்கு திட்டங்களை திறம்பட இயற்றுங்கள். குறுகிய காலத்திற்கான திட்டங்கள் தானே சரியாகிவிடும் என்கின்றார்.

பணம்!

ஒரு ரூபாய் சேமிப்பு என்பது ஒரு ரூபாய் சம்பாத்தியத்திற்கு ஒப்பானது என்பார்கள். அது உண்மையில்லை. இன்றைய வருமான வரி விகிதத்தை பாருங்கள். ஒரு ரூபாய் சம்பாதிக்க நீங்கள் கிட்டத்தட்ட ஒரு ரூபாய் முப்பது பைசா சம்பாதிக்க வேண்டும். அப்படி என்றால் நீங்கள் ஒரு ரூபாய் சேமித்தால் ஒரு ரூபாய் முப்பது காசுகள் சம்பாதித்ததாகத்தானே அர்த்தம். எனவே செலவை கட்டுப்படுத்துங்கள் என்கின்றார். போரடிக்கின்றது/டல்லாக இருக்கின்றது என்று ஷாப்பிங் போகாதீர்கள் – கடைக்கு ஆனாலும் சரி – ஆன்லைன் ஆனாலும் சரி. சினிமாவைப் போல் ஒரே பாட்டில் பணக்காரராக முடியும் என்று கனவு கண்டு கையில் இருக்கும் காசை வாரி இறைக்காதீர்கள். உங்கள் வாழ்நாளில் உங்கள் கையில் வந்து போகும் ஒவ்வொரு ரூபாயும் எப்படி வந்தது, எப்படிச் சென்றது என்பதை நினைவில் வைக்க முயலுங்கள்.

உங்கள் அலுவலகத்தை ஒரு முறை நினைத்துப்பாருங்கள். ஒரு பொருளை வாங்க எத்தனை அப்ரூவல்கள் தேவைப்படுகின்றது. இது தேவையா என்ற கேள்வி எத்தனை தடவை கேட்கப்படுகின்றது. பட்ஜெட் போடப்படுகின்றது. நான்கு இடங்களில் கொட்டேஷன் வாங்கப்படுகின்றது. மீட்டிங் போட்டு செலவை குறைக்கவேண்டும் என்று பேசப்படுகின்றது. பணத்தை பொறுத்தவரை வீட்டில் உங்கள் அலுவலக நடைமுறையை கொண்டுவாருங்கள். செலவுகள் தானே வழிக்கு வரும் என்கின்றார்.

கேரியர் பிளானிங்!

உலகத்தை சுற்றிவரவேண்டும் என்று கிளம்பினால் சுலபத்தில் பயணத்தை முடிக்க மேப் வேண்டும். இல்லாவிட்டால் எங்கே போகின்றோம் என்பதே நமக்குத் தெரியாது. சூப்பர் மார்க்கெட்டிற்கு சாமான் வாங்கப்போய் சுலபத்தில் வேலை முடியவேண்டும் என்றால் கையில் லிஸ்ட் வேண்டும். இல்லாவிட்டால் தேவையானதை வாங்காமலும் தேவையில்லாததை வாங்கி சிக்கலிலும் சிக்கிக்கொள்வோம். ஜாப் செக்யூரிட்டி, லாயல்டி என்ற மாயை எல்லாம் ஆட்குறைப்பு என்ற அஸ்திரத்தின் முன் செல்லாக் காசாகிவிடும். அதனால், உங்கள் வழி என்ன என்பதை நீங்கள் நிர்ணயம் செய்யுங்கள். இந்த வருடம் இந்த சம்பளம், இந்த பதவி என்ற திட்டத்தை கைவசம் வைத்திருங்கள்.

உங்கள் நிறுவனம் அதற்கு ஒத்துழைத்தால் இருங்கள். இல்லாவிட்டால் எந்த நிறுவனம் அதற்கு சரிபடுகிறதோ அதனோடு கூட்டணி அமைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்ற வியாபாரத்தில் வேலை பார்க்கும் நிறுவனத்திலும் வியாபார நோக்கில் செயல்பட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்கின்றார் ஆசிரியர்.

அனைவரும் படிக்கவேண்டிய ரொம்பவும் நடைமுறை சார்ந்த சுலபத்தில் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் இது.

பி.கிருஷ்ணகுமார் - தொடர்புக்கு p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x