

நடப்பாண்டில் மற்ற முக்கிய நாடுகளின் கரன்ஸிகளுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டிருக்கிறது. புளும்பெர்க் தகவல்படி நடப்பாண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ரஷ்யாவின் நாணயமான ரூபிள் 1.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் கடந்த வருடம் ரஷ்ய கரன்ஸி கடுமையாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மாறாக பிரேசில் கரன்ஸியான ரியால் 12.3 சதவீதம் சரிந்திருக்கிறது. இந்தோனேஷியா ரூபையா 4.5 சதவீதமும், மலேசியாவின் ரிங்கிட் 4.2 சதவீதமும், தென் ஆப்பிரிக்காவின் ராண்ட் 3.2 சதவீதமும், சீனாவின் கரன்ஸியான ரென்மின்பி 0.9 சதவீதமும் சரிந்தது.
டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்ஸி மதிப்பு சரியும்போது ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு கச்சா எண்ணெய் விலை சரிவுதான் காரணமாகும். நடப்பாண்டின் முதல் இரண்டு மாதங்களில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 45 டாலருக்கு கீழ் இருந்தது.
ஒரு பேரலுக்கு 10 டாலர் குறையும் பட்சத்தில் இந்தியாவுக்கு 940 கோடி டாலர் மீதமாகும் என்று சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.
மற்றொரு முக்கியமான காரணம் உண்மையான வட்டி விகிதமாகும். இப்போது உண்மையான வட்டி விகிதம் 2.6 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருக்கிறது. அமெரிக்காவில் உண்மையான வட்டி விகிதம் 2 சதவீதமாகவும், இந்தோனேஷியாவில் 1.2 சதவீதமாகவும் இருக்கிறது.