Published : 27 Mar 2015 10:24 AM
Last Updated : 27 Mar 2015 10:24 AM

ஆடி-யின் 10 புதிய கார்கள்

ஜெர்மனியின் சொகுசுக் காரான ஆடி நிறுவனம் இந்தியாவில் தங்கள் தயாரிப்புக்கு உள்ள வரவேற்பைப் பார்த்து மேலும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 10 புதிய ரகக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் சொகுசுக் கார் விற்பனையில் 34 சதவீத சந்தையைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இந்தியா வில் 10,851 கார்கள் விற்பனை யானதாகத் தெரிவித்தார். தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு புதிய மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

அந்த வரிசையில் ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் ரக கார்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. லேசர் ஹை பீம் முகப்பு விளக்குகளைக் கொண்டதாக இவை வெளிவந்துள்ளன.

சொகுசு கார்கள் சந்தையில் தொடர்ந்து தங்களது தயாரிப்புகள் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் சொகுசு கார் விற்பனை சந்தையைப் பிடிப்பதற்கு நீண்ட காலம் பிடித்ததாகவும் அதற்கு தாங்கள் மிக அதிகம் உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கார்களை தயாரித்ததும் தங்களது வெற்றிக்குக் காரணம் என்றார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட மாடல் கார் மட்டுமல்ல அனைத்து ரகக் கார்களுக்கும் இந்தியச் சந்தையில் பெருமளவு வரவேற்பு உள்ளது. இருந்தாலும் ஆடி ஏ3 மாடல் காருக்கு அதிகபட்ச வரவேற்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியச் சந்தையில் மட்டுமல்ல சர்வதேச அளவில் அதிகம் விரும்பப்படும் 10 சொகுசுக் கார்களில் இந்தக் காரும் இடம்பெற்றுள்ளது. இதேபோல ஆடி க்யூ7 ரகக் காரும் பெருமளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு மாடல் காருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவு ரசிகர்கள் உள்ளனர். எனவே அந்தந் பிரிவு மாடல் கார்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து தரப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு மாடல் காரும் தனித்தன்மையோடு திகழ்கின்றன என்று ஜோ கிங் தெரிவித்தார்.

புதிய மாடல் கார்கள் அறிமுகமாகும் அதேவேளையில் வாடிக்கையாளர்களிடம் சேர்ப் பதற்காக விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x