

வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று சந்தை சரிந்து முடிந்தது. கடந்த ஒரு மாதத்தில் சந்தை மிகக்குறைந்த புள்ளிகளில் நேற்று முடிந்தது.
அமெரிக்க மத்திய வங்கி தனது நிதிக் கொள்கையை வெளியிட உள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுத்ததன் காரணமாக சந்தை இறக்கத்தை சந்தித்தது.
சென்சென்ஸ் நேற்று 65 புள்ளிகள் சரிவைக் கண்டு 28437 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டியின் முக்கியப் பங்குகள் 14 புள்ளிகள் சரிவைக் கண்டு 8633 புள்ளிகளில் முடிந்தது. நேற்றைய சந்தையில் உலோகம், கேபிடல் கூட்ஸ், எப்எம்சிஜி துறை பங்குகள் சரிவான வர்த்தகம் கண்டன.
ஹெல்த்கேர், வங்கி, ஐடி துறை பங்குகள் ஏற்றமாக வர்த்தகம் ஆனது. டிஎல்எஃப் நிறுவனத்தின் தடை நீக்கத்துக்குப் பிறகு அந்த நிறுவனப் பங்கு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் 4.38 சதவீதம் ஏற்றத்தை கண்டது.
மேலும் ஆசியன் பெயிண்ட்ஸ் 2.90%, ஜீ என்டர்டெயின்மென்ட் 2.77%, ஜிண்டால் ஸ்டீல் 2.23%, ஹெச்சிஎல் 2.21% பங்குகள் ஏற்றம் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தில் ஸ்டெர்லைட் -5.31%, ஹிண்டால்கோ -3.72%, கெய்ர்ன் இந்தியா -3.39%, பார்தி ஏர்டெல் -2.96%, என்டிபிசி -2.26% இறக்கத்தைக் கண்டன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதால் ஆசிய சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.