Published : 28 May 2014 10:00 AM
Last Updated : 28 May 2014 10:00 AM

செயில், என்எம்டிசி பங்கு விற்பனை: தேசிய நலன்தான் முக்கியம்

பொதுத்துறை நிறுவனங்களான செயில், என்எம்டிசி உள்ளிட்டவற்றில் அரசுக்கு உள்ள பங்குகளைக் குறைக்க முடிவு செய்யும்போது தேசிய நலன்தான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும் என்று மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர சிங் தோமர் கூறினார்.

முதலில் பங்கு விலக்கல் குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதுகுறித்து கருத்து சொல்வது சரியாக இருக்கும் என்று கூறிய தோமர், இந்த விஷயத்தில் தனிப்பட்ட வகையில் தமக்கு கருத்து ஏதும் கிடையாது. அதேசமயம் எந்த முடிவும் அனைத்து தரப்பிலும் கலந்து பேசிய பிறகே எடுக்கப்படும். குறிப்பாக தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

அமைச்சரவைச் செயலர் அளித்த பரிந்துரையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தனது பங்குகளை 51 சதவீத அளவுக்குக் குறைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மேம்பாட்டு பணிகளுக்குப் பயன்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய உருக்கு ஆணையம் (செயில்), ராஷ்ட்ரிய இஸ்பட் நிகம் லிமிடெட் (ஆர்ஐஎன்எல்), இரும்புத் தாது நிறுவனம் என்எம்டிசி லிமிடெட், மாங்கனீஸ் தாது உற்பத்தி செய்யும் எம்ஓஐஎல் லிமிடெட், இரும்பு உருளை தயாரிப்பு நிறுவனம் கேஐஓசிஎல் லிமிடெட் ஆகிய அனைத்தும் மத்திய உருக்கு அமைச்சகத்தின்கீழ் வருகின்றன.

இந்த நிறுவனங்களில் அரசின் பங்கு 80 சதவீதமாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்புக்கிணங்க ஒருங்கி ணைந்த ஸ்திரமான வளர்ச்சியை எட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக தோமர் கூறினார். சுரங்கத்துறையில் அதிக ஊழல் நிலவுவது குறித்து கேட்டதற்கு, தனது கவனத்துக்கு கொண்டு வரப்படும் விஷயங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாட்டில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய பிரச்சினை என ஒப்புக் கொண்ட தோமர், தங்கள் கட்சியும் இதை உணர்ந்துள்ளது என்றும் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x