Published : 22 Mar 2015 12:43 PM
Last Updated : 22 Mar 2015 12:43 PM

டிஜிலாக்கருக்கு அதிகரித்துவரும் வரவேற்பு

வங்கி லாக்கரில் தங்க நகைகள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து பாதுகாக்கலாம். அதேபோல தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னணு தகவல்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் டிஜிலாக் கர் அதாவது டிஜிட்டல் லாக்கர். (https://digitallocker.gov.in/)

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையினரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த யோசனை. ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் இயக்குநராக இருந்த ஆர்.எஸ். சர்மாதான் இப்போது இத்துறையின் செயலராக உள்ளார். அவரே டிஜிலாக்கர் திட்டத்தை செயல்படுத்துவதிலும் பின்புலமாக உள்ளார்.

உங்கள் மின்னணு ஆவணங்களை டிஜிலாக்கரில் பாதுகாப்பாக வைக்க உங்களுக்குத் தேவையெல்லாம் ஆதார் அடையாள அட்டைதான். அந்த எண்ணை செல்போன் மூலம் டிஜிலாக்கரில் பதிவு செய்தால் உங்களது செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தும் சங்கேத வார்த்தை வரும். அதேபோல நீங்கள் பதிவு செய்துள்ள இணையதள முகவரிக்கும் இது வரும். அதன்பிறகு டிஜிலாக்கரில் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்கும். அதன்படி செயல்பட்டால் உங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் கிடைக் கும்.

ஆன்லைன் மூலம் தகவல்களை பாதுகாப்பாக வைப்பதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த டிஜிலாக்கருக்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனிநபர்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

குஜராத் முதலிடம்

இதுவரை கிடைத்த தகவலின்படி டிஜிலாக்கரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 58,602 ஆக உள்ளது. இதுவரையில் 53,016 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குஜராத் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் (9,526) பயன்படுத்துகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 8,299 பேரும், மகாராஷ்டிரத்தில் 6,711 பேரும் பயன்படுத்துகின்றனர்.

தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், டிராப்பாக்ஸ் ஆகியன ஆவணங்களை சேமித்து வைப்பதற்கான இட வசதியை அளிக்கின்றன.

டிஜிலாக்கரை பயன்படுத்து வோர் காப்பீடு, மருத்துவ அறிக்கை, பான் கார்டு, பாஸ்போர்ட், திருமண சான்றிதழ், பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றுகளை டிஜிட்டல் முறையில் இதில் சேமித்து வைக்கலாம்.

இதன் மூலம் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக பதிவுசெய்து வைக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய ஆவணங்களை சரிபார்ப்பதும் மிக எளிதாகும். இப்போது தனி நபர்களுக்கு 10 எம்பி வரையில் இலவசமாக இடமளிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு ஜிபி வரை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x