

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரி லேயே புதிய சட்டம் அறிமுகப் படுத்தப்படும் என்று மத்திய அரசின் வருவாய்த்துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சக்தி காந்த தாஸ் கூறியதாவது:
ஸ்விட்சர்லாந்து நாட்டில் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 628 பேரின் பட்டியலை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெற்றுள்ளோம். இதை திருடப்பட்ட தகவல் என்று சொல்லி ஸ்விட்சர்லாந்து அரசு நமக்கு தகவல்கள் தர மறுத்துவந்தது.
கடந்த அக்டோபரில் ஸ்விட்சர்லாந்து சென்று நேரில் பேசிய பிறகு ஒரு சில விவரங்களை தருவதாக அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி, இந்திய அதிகாரி கள் விசாரணையின் மூலம் தெரிய வந்த கருப்புப் பணம் பதுக்கியிருப் பவரின் பட்டியலை தரவும், எதிர் காலத்தில் கணக்கு தொடங்குபவர் களின் தகவல்களை உறுதி செய்ய வும், தகவல் பரிமாற்றத்துக்கும் ஒப்புக்கொண்டுள்ளது.
வெளிநாட்டில் பதுக்கப்பட் டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்கவும், பதுக்கலை கட்டுப்படுத்த வும் கடுமையான சட்டங்கள் இல்லை. எனவே, கருப்புப் பணத்தை மீட்பதற்கான தனி சட்டம் அவசியம். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க, பொதுத்துறை முதலீட்டைவிட தனியார் முதலீடு அதிகமாக இருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 25 சதவீதமாக குறைத்திருப்பது சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சிஐஐ அமைப்பின் முன்னாள் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டுகளில் கல்வி உரிமை, உணவு பாதுகாப்பு, சுகாதார உரிமை என பணத்தை மானியங்களுக்கு அரசு செலவிட்டுவிட்டது. தற்போது புதிய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதலே சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன’’ என்றார்.