Published : 24 Mar 2015 10:16 AM
Last Updated : 24 Mar 2015 10:16 AM

பொரித்த சிக்கன்: விரலைச் சூப்ப வைக்கும் சுவை!

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், பர்கர், மில்க் ஷேக், உருளைக்கிழங்கு ஃப்ரைஸ் என்னும் மூன்றே மூன்று ஐட்டங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஃபாஸ்ட் புட் உலகின் நம்பர் 1 ஆக இருப்பது தொழில் உலகின் மாபெரும் சாதனை.

இதற்குச் சவால் விடும்படியாக, இன்னொரு துரித உணவு விடுதி, ஒரே ஒரு சாப்பாட்டு ஐட்டத்தை மையமாக வைத்துக்கொண்டு, உலகின் 118 நாடுகளில் 19,000 க்கும் அதிகமான துரித உணவு விடுதிகள் நடத்துகிறார்கள். இவற்றுள் 360 உணவகங்கள் இந்தியாவில் இருக்கின்றன. வருட விற்பனை 23 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்). இந்தச் சாதனையின் மூல காரணம் யார் தெரியுமா? கோழிக்குஞ்சு. சிக்கன்!

62 வயதில் வெற்றி

இந்த நிறுவனம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கேஎஃப்சி (KFC). இதைத் தொடங்கியவர் ஹார்லாண்ட் ஸாண்டேர்ஸ் (Harland Sanders). கேஎஃப்சி கடைகளிலும், விளம்பரங்களிலும், கோட் சூட் போட்டுக்கொண்டு ஒரு தாடிக்காரர் இருப்பாரே? அவரேதான்.

“வெறும் சிக்கனை வைத்து லட்சம் கோடிகள் வியாபாரமா?” என்று நம்மில் பலர் ஸாண்டேர்ஸ் மீது பொறாமைப்பட்டிருப்போம். ஒரு உண்மை தெரியுமா? ஸாண்டேர்ஸ் வெற்றி கண்டது தன் 62 ம் வயதில். ஆமாம், ஏராளமானவர்கள் வேலைகளிலிருந்து ஓய்வு பெறும் வயதில். அதுவரை, ஒரு படி ஏறினால், பத்து அடிகள் சறுக்கும் பரமபதமாக அவர் வாழ்க்கை இருந்தது.

நாம் சுமார் 125 ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும்.

1890 ம் ஆண்டு. அமெரிக்காவில் இந்தியானா மாகாணம். ஹென்ரிவில் (Henryville) என்னும் நூறு பேரே வசித்த குட்டிக் கிராமம். ஸாண்டேர்ஸ் இங்கே பிறந்தார். அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாடும் வறுமையான குடும்பம். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போனார்கள். ஸாண்டேர்ஸ் மூத்த பிள்ளை. அவருக்குக் கீழ் ஒரு தம்பி, ஒரு தங்கை.

சிறு வயதில் குடும்பப் பொறுப்பு

ஸாண்டேர்ஸுக்கு ஆறு வயது. அப்பா திடீரென இறந்தார். அம்மா இன்னொரு வேலைக்குப் போனால்தான், வீட்டில் அடுப்பு எரியும். போனார். அதிகாலை வேலைக்குப் போனால், இருட்டும்போதுதான் வீடு திரும்பமுடியும். ஸாண்டேர்ஸ் தலையில் குடும்ப பாரத்தைச் சுமத்தினார்.

அந்தச் சிறுவயதில் ஸாண்டேர்ஸுக்கு வீட்டில் என்ன கடமைகள் தெரியுமா? தம்பி, தங்கையைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அப்புறம், வீட்டுச் சமையல். இவை அத்தனைக்கும் அம்மா அற்புதப் பயிற்சி தந்தார். ஸாண்டேர்ஸுக்கும் அவர் அம்மாவுக்கும் அப்போது தெரியாது, ஆறு வயதில் அவர் கைகளில் பிடித்த கரண்டி, அறுபதாம் வயதில் அதிர்ஷ்டமான அட்சய பாத்திரமாகப்போகிறது என்று.

சமையலில் ஈடுபாடு

ஸாண்டேர்ஸ் ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாகத்தான் சமையல் செய்யத் தொடங்கினார். விரைவில் அவருக்கு விளையாட்டுகளைவிடச் சமையல் செய்வதில் அதிக ஈடுபாடு வந்தது. அதிலும், பிஸ்கெட், சிக்கன் ஆகிய இரண்டையும் சமைப்பதில் தனி விருப்பம். அம்மா சொல்லிக் கொடுத்தவற்றையும் தாண்டி, தன் கற்பனைகளையும் கலந்து அடிக்கடி சோதனைகள் செய்தார்.

இந்த அனுபவத்தால், அவர் இளம் மனதில் அவர் எதிர்கால வாழ்க்கை லட்சியம் தெளிவானது ஏராளமானவர்கள் தன் சிக்கனை ரசித்துச் சாப்பிட்டு மனமாரப் பாராட்டும் உணவகம் தொடங்கவேண்டும்.

நான்கு வருடங்கள் ஓடின. ஸாண்டேர்ஸுக்குப் பத்து வயது. அவர் அம்மா மறுமணம் செய்துகொண்டார். புது அப்பாவுக்கு ஏனோ ஸாண்டேர்ஸைப் பிடிக்கவில்லை. மற்ற இரண்டு குழந்தைகளும் தங்களோடு வாழ அனுமதித்தவர், ஸாண்டேர்ஸ் வீட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று அடம் பிடித்தார். வேறு வழி தெரியாத அம்மா, மகனை ஒரு பண்ணையில் வேலையாளாகச் சேர்த்துவிட்டார்.

வேலை அதிகம் கூலி குறைவு

அதிகாலை முதல் அர்த்த ராத்திரி வரை கடும் உடல் உழைப்பு. மாதச் சம்பளம் வெறும் நான்கு டாலர்கள் மட்டுமே. அம்மா, தம்பி, தங்கை ஆகியோர் எப்போதாவதுதான் பார்க்க வருவார்கள். குடும்பம் இருந்தும் அநாதை.

ஸாண்டேர்ஸ் இந்த வேலையில் மூன்று வருடங்கள் தொடர்ந்தார். வேறு வேலை தேடத் தொடங்கினார். அடிக்கடி, உணவு விடுதி தொடங்கும் ஆசை அடிமனதில் தோன்றும். கனவு சரிதான்.

ஆனால், அதை நிஜமாக்கும் பணபலம் அவரிடம் கொஞ்சம்கூட இல்லை. சமையல் வேலைக்குத்தான் போவேன் என்று அது கிடைக்கும்வரை காத்திருக்கும் நிலையும் இல்லை. கிடைக்கும் வேலையை எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம்.

வீடுகளுக்குப் பெயின்ட் அடிப்பவர், நீராவி ரெயிலில் கரி அள்ளிப் போடுபவர், போட் ஓட்டுபவர், பஸ் கண்டக்டர், இன்ஷூரன்ஸ் சேல்ஸ்மேன், பெட்ரோல் பங்க் உதவியாளர் எனப் பல வேலைகள் எதுவுமே விரும்பி எடுத்த வேலைகள் அல்ல, கிடைத்த வேலைகள்.

சிக்கனம்

ஸாண்டேர்ஸ் ஒரு சிக்கனச் செம்மல். அநாவசியச் செலவுகளே கிடையாது. குறைந்த சம்பளத்திலும், பெரும்பகுதியைச் சேமித்தார். என்றாவது ஒரு நாள் சிக்கன் உணவகம் திறக்க முதலீடு வேண்டுமே? தியாகங்கள் செய்யாமல், சாதனைகள் செய்யமுடியாது என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. சேமிப்பு வளரத் தொடங்கியது.

பெட்ரோல் பங்க்கில் விடுதி

1930. ஸாண்டேர்ஸ் இருண்ட வாழ்க்கையில் ஒரு மின்னல். கென்ட்டகி (Kentucky) நகரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வியாபாரம் இல்லாமையால் நொடித்துப்போனார்கள். பங்க்கை மலிவு விலைக்கு விற்க முன்வந்தார்கள். ஸாண்டேர்ஸ் ரிஸ்க் எடுத்தார்.

பங்க்கை விலைக்கு வாங்கினார். அதன் ஒரு ஓரத்தில், அவர் கனவு உதயமானது - சிறிய ரெஸ்டாரன்ட். முக்கிய ஐட்டங்கள், அம்மா சொல்லிக் கொடுத்த கைமணத்தில் உருவான பொரித்த சிக்கன், பிஸ்கெட்.

ரெஸ்டாரன்ட் செம ஹிட். அதிலும் அவருடைய சிக்கனுக்காகக் கூட்டம் பொங்கி வழிந்தது. விரைவிலேயே ஒரு ஹோட்டல், அது 142 பேர் உட்காரும் பெரிய ரெஸ்டாரன்ட், என ஸாண்டேர்ஸ் தன் தொழிலை விரிவுபடுத்தினார். அமெரிக்காவின் ஒவ்வொரு ஊரிலும் தன் ஹோட்டலும், சிக்கனும் சக்கைப்போடு போடுவதாகப் (பகல்) கனவுகள் கண்டார்.

போரால் நஷ்டம்

1939 ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஸாண்டேர்ஸ் வாழ்விலும் புயல் அடித்தது. பொருளாதார நெருக்கடிகளால், மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை நிறுத்தினார்கள். தாங்கமுடியாத நஷ்டம். கடன் தந்தவர்கள் நெருக்கினார்கள். ஹோட்டல் ஏலம் விடப்பட்டது. அடிமாட்டு விலைக்கு விற்பனையானது. 60 வயதில், ஸாண்டேர்ஸ் சேமிப்பு முழுதும் கரைந்து போன நிலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்குத் தெரிந்தது சிக்கன் சமைப்பது மட்டுமே.

அந்தத் துரும்பைப் பிடித்துத் துன்பக் கடலிலிருந்து வெளியே வரவேண்டும். ஸாண்டேர்ஸ் தன் சிக்கனின் சுவையைத் தனித்துவம் கொண்டதாக்க முடிவு செய்தார். பதினொரு மூலிகைகள் சேர்த்தார். பிரஷர் குக்கரில் வேக வைத்தார். அவரே அதிசயப் படும் அளவுக்கு அற்புதச் சுவை! தன் சிக்கனுக்குக் கென்ட்டகி ஃப்ரைடு சிக்கன் என்று பெயர் வைத்தார். கம்பெனி பெயரும் அதுவேதான்.

பிரான்சைஸி

சொந்தமாகக் கிளைகள் திறக்க ஸாண்டேர்ஸிடம் பணம் இல்லை. ஆகவே, கென்ட்டகி ஃப்ரைடு சிக்கன் என்னும் பெயரில் கடைகள் திறக்கவும், தன் தனித்துவ சிக்கனை விற்கவுமான உரிமையை பிரான்ச்சைஸ் (Franchise) முறையில் தந்தார்.

இந்த அடிப்படையில், 1952 ம் ஆண்டு உட்டா நகரில் முதன் முதலாக கென்ட்டகி ஃப்ரைடு சிக்கன் விற்பனை தொடங்கியது. விரலைச் சூப்பவைக்கும் சுவை (Finger lickin’ good) என்னும் விளம்பர வாசகம் தேசிய கீதமானது. ரசிகர்கள் கூட்டம் பெருகியது. அடுத்த 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுக்க 600 கேஎஃப்சி கடைகள்.

1980 இல் ஸாண்டேர்ஸ் மரணமடைந்தார். 90 வருடங்கள் வாழ்க்கை, பல்லாயிரம் கோடி டாலர்கள் சொத்து, உலகத்தின் சுவையான சிக்கன் என மக்கள் மனங்களில் பிடித்திருக்கும் இடம் நிச்சயமாக, தன் கனவுகளை நிஜமாக்கிவிட்ட பெருமையோடுதான் அவர் உயிர் பிரிந்திருக்கும்.

(1986 இல் பெப்ஸி நிறுவனம் கென்ட்டகி ஃப்ரைடு சிக்கன் நிறுவனத்தை வாங்கினார்கள். 1991 இல் கேஎஃப்சி என்று பெயரைச் சுருக்கினார்கள். பெயர் சுருங்கினாலும், உரிமையாளர் மாறினாலும், ஒவ்வொரு கேஎஃப்சி கடையிலும் நம்மை இன்றும் வரவேற்பவர், கோட் சூட் போட்ட தாடி தாத்தாதான்!)

சேர்க்கப்படும் மூலிகைகள் என்னென்ன என்பது கேஎஃப்சி இல் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாக இன்றும் காப்பாற்றப்பட்டு வருகிறது.

slvmoorthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x