

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி இந்திய வங்கிகளின் வாராக்கடன் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது. டிசம்பர் 2014 வரை ரூ. 3,00,611 கோடி வாராக்கடன் இருக்கிறது. மந்தமான பொருளாதார நிலை காரணமாக வாராக்கடன் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2,62,402 கோடி ரூபாயாகவும், தனியார் வங்கிகளின் வாராக்கடன் 38,209 கோடி ரூபாயாகவும் இருக்கிறது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
டிசம்பர் 2014 நிலவரப்படி பொதுத்துறை வங்கிகள் 46,49,846 கோடி ரூபாய் கடனும், தனியார் வங்கிகள் 16,77,875 கோடி ரூபாய் கடனும் வழங்கி இருக்கின்றன என்று தெரிவித்தார்.
பொருளாதார மந்தநிலை
சர்வதேச பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக மந்தமாக இருப்பது, பல திட்டங்கள் முடங்கி இருப்பது, உள்நாட்டு வளர்ச்சி குறைந்தது ஆகிய காரணங்களால் வாராக்கடன் அதிகரித்தது என்றார்.
கடன் வாங்கியவருக்கு வங்கி ஊழியர்கள் மறைமுக ஆதரவு தெரிவிக்கும் பட்சத் தில் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதன்படி கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 470 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10,988 பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.