2015-ல் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகம் ரூ. 1 லட்சம் கோடியாக உயரும்: என்ஐஎம்ஏஐ, ஐஎம்ஆர்பி சர்வதேச நிறுவனங்கள் கூட்டு ஆய்வு

2015-ல் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகம் ரூ. 1 லட்சம் கோடியாக உயரும்: என்ஐஎம்ஏஐ, ஐஎம்ஆர்பி சர்வதேச நிறுவனங்கள் கூட்டு ஆய்வு
Updated on
2 min read

இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான சந்தை இந்த ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இணையதள சேவைகள் அதிகரித்து வருவதும், இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை உயர்ந்து வருவதாலும் இந்த ஆண்டில் டிஜிட்டல் வர்த்தக சந்தை 1 லட்சம் கோடியாக உயரும் என்று என்ஐஎம்ஏஐ மற்றும் ஐஎம்ஆர்பி சர்வதேச நிறுவனங்கள் கூட்டாக மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் டிஜிட்டல் சந்தை மதிப்பு 2014ம் ஆண்டில் 53 சதவீதம் உயர்ந்து ரூ.81,525 கோடி வர்த்தகம் கண்டுள்ளது. 2015ல் 33 சதவீதம் சீரான வளர்ச்சி எதிர்பார்த்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 1 லட்சம் கோடி வர்த்தகத்தை டிஜிட்டல் சந்தை எட்டும் என்று இந்த நிறுவனங்களின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

டிஜிட்டல் முறையிலான வர்த்தகம் ஆண்டுக்காண்டு சீராக வளர்ச்சி கண்டு வருகிறது. 2010ம் ஆண்டில் ரூ.26,263 கோடியும், 2012ல் ரூ.47,349 கோடியும், 2013ம் ஆண்டில் ரூ.53,301 கோடியும் வர்த்தகம் கண்டுள்ளது.

இணையதளத்தில் பயண டிக்கெட்டுகள் வாங்குவதன் மூலம் ரூ. 50,050 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது டிஜிட்டல் வர்த்தகத்தில் 61 சதவீதமாகும்.

மொத்த டிஜிட்டல் வர்த்தகத்தில் 29.4 சதவீதம் இ-டெயில் வர்த்தகமாகும். இந்த முறையில் 2013ல் நடந்த வர்த்தகத்தைவிட 2014ல் 1.4 மடங்கு அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இ-டெயில் பிரிவில் மொபைல் போன்கள் மற்றும் மொபைல் போன் சார்ந்த பொருட்களின் வர்த்தக மதிப்பு ரூ.9,936 கோடியாக உள்ளது. தவிர காலணிகள் மற்றும் பிற தனிநபர் பொருட்களின் மதிப்பு ரூ. 4,699 கோடியாக உள்ளது.

நுகர்வோர் பயன்பாடு சார்ந்த சமையலறை சாதனங்கள் ரூ. 3,404 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தவிர லேப்டாப் மற்றும் டேப்லட் போன்கள் ரூ.2,780 கோடி, புத்தகங்கள், ரூ.648 கோடி, பர்னிச்சர்கள் ரூ.1,059 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் 45 சதவீத மக்கள் பொருட்களை வாங்கியபின் பணம் கட்டும் `கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் வாங்குவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 21 சதவீத மக்கள் டெபிட் கார்டு மூலமும், 16 சதவீத மக்கள் கிரெடிட் கார்டு மூலமும், 10 சதவீதம் பேர் நெட்பேங்கிங் வழியாகவும் வர்த்தகம் செய்துள்ளனர். கேஷ் கார்டு மூலமும் 8 சதவீத மக்கள் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

தவிர டிஜிட்டல் வர்த்தகத்தில் நிதிச் சேவை செயல்பாடுகள், திருமண இணைய தளங்கள், விளம்பரங்கள் சார்ந்த வர்த்தகம் 2014ல் 5.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

சினிமா டிக்கெட்டுகள், உணவு மற்றும் மளிகை சந்தைகள் சார்ந்த இணையதள சேவைகள் 2010 லிருந்து 73 சதவீதம் கூட்டு வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் மதிப்பு 2014-ம் ஆண்டு ரூ.2,025 கோடியாக உள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி சந்தை 2013ம் ஆண்டை விட உயர்ந்து 40 சதவீத சந்தையை கொண்டுள்ளது. இதன் மதிப்பு 350 கோடியாக உள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in