

பொது பட்ஜெட்டில் நேரடி வரிச் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் வேறு சில திட்டங்களால் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறியதாவது:
பட்ஜெட்டில் உற்பத்தி வரிச் சலுகையோ வேறு எந்த வரிச் சலுகைகளோ அறிவிக்கப் படவில்லை. எனினும் நாடு முழுவதும் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றும் 2016 ஏப்ரல் முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொலைநோக்குப் பார்வையில் ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்.
மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறுவனங்களுக்கான வரி தற்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்கு வாகனங்களுக்கான வரிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு வாகன உற்பத்தி அதிகரிக்கும் என்றும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் குறித்து அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் வினோத் கே. தாசரி கூறியதாவது: வாகனங்களுக்கான உற்பத்தி வரியை உயர்த்தவில்லை என்பதே பெரிய விஷயம். குறுகிய கால சலுகைகளைவிட தொலைநோக்குப் பார்வையிலான சலுகைகள் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு கைகொடுக்கும். மத்திய அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
கே.பி.எம்.ஜி. ஆட்டோமோட்டிவ் பிரிவுத் தலைவர் ராஜீவ் சிங் கூறியபோது, நாட்டின் உள்கட்டமைப்புக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லட்சம் கி.மீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இது ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்றார்.
அப்பல்லோ டயர்ஸ் நிறுவன தலைவர் ஓங்கர் கொன்வார் கூறியபோது, வரிகள் விதிப்பில் நிலவும் குறைபாடுகளை களைய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம், அப்போதுதான் டயர் உற்பத்தி துறை வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார்.
ஜெனரல் மோட்டர்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் அரவிந்த் சக்சேனா கூறியதாவது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திறம்பட செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். ஆட்டோ மொபைல் துறையும் வளர்ச்சி அடையும். எனினும் ஆட்டோமொபைல் துறைக்கு நேரடி வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறியபோது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் நிறுவனங்களும் தனிநபர்களும் பெரிதும் பயன் அடைவார்கள் என்றார்.
டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் என்.ராஜா பேசியபோது, வாகன உற்பத்தி மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பது, மின்சார கார்களின் உற்பத்தியை அதிகரிக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இதேபோல உற்பத்தி வரியையும் குறைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்தி ருக்கும். இந்திய ஆட்டோமொபைல் துறையில் மாற்று எரிசக்தி, ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
வால்வோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கமல் பாலி கூறியபோது, சிறப்பு கூடுதல் வரி விலக்கு சலுகை ஆட்டோ மொபைல் துறைக்கு அளிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது, வரிவிதிப்பில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை உடனடியாக களைய வேண்டும் என்றார்.
என்ன கேட்டார்கள், என்ன கிடைத்தது ?
# வாகனங்களுக்கு உற்பத்தி வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறை சார்பில் கோரப்பட்டது. ஆனால் பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
# சென்வாட் கிரெடிட் கோரப்படுவதற்கான காலக்கெடுவை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு நீக்கப்படவில்லை. எனினும் இப்போதைய 6 மாத காலஅவகாசம் ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
# ஹைபிரிட் கார்கள்/ மாற்று எரிபொருள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் குறித்த கொள்கை அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.