Published : 04 Mar 2015 10:43 AM
Last Updated : 04 Mar 2015 10:43 AM

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்...

தான் நடத்தும் தொழிலில் வெற்றி காண வேண்டும் என்றால், எந்தக் நிறுவனமும், மக்கள் மனங்களில் தங்கள் தயாரிப்புப் பொருட்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவேண்டும். இந்த பொசிஷனிங்கை உருவாக்க நிறுவனங்கள் ஏராளமான பணம், நேரம், ஊழியர்களின் திறமை ஆகியவற்றைச் செலவிடுகிறார்கள்.

இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் தொழில் தொடங்கும்போது, தானாகவே இந்த பொசிஷனிங் அமைந்துவிடும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அதே சமயம், இவர்களுள் ஒரு சில திறமைசாலிகள் தற்செயலாக அமையும் பொசிஷனிங்கை உறுதியாக்குவார்கள், அதை அடித்தளமாகக் கொண்டு மென்மேலும் வெற்றிகளை அடைவார்கள்.

இ-காமர்ஸ் நிறுவனமான இ-பே (eBay) நிறுவன வரலாறு அத்தகைய ஒரு அனுபவம். இதை நிறுவியவர் பியர் ஒமிடியார் (Pierre Omidyar). பியருக்கு பள்ளி நாட்களிலேயே கம்ப்யூட்டர் மேல் காதல் பிறந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்த ஆறு வருடங்களில் மூன்று வேலை மாற்றங்கள். 1994 இல் ஜெனரல் மாஜிக் என்ற மொபைல் டெலிபோன் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கேயே வேலை செய்த பமேலா என்னும் பெண்ணைக் காதலித்தார்.

தான் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று பியருக்கு அடங்காத ஆசை. இன்டர்நெட் மாபெரும் வாய்ப்புகளைத் திறந்திருக்கிறது, எப்படியாவது இன்டர்நெட் தொடர்பான தொழில் தொடங்க வேண்டும் என்று ஆலோசித்தார். பியரின் பிசினஸ் ஐடியா தேடலும், பமேலா மீது கொண்ட காதலும் தற்செயலாகச் சந்தித்தன.

பெஸ் டிஸ்பென்ஸர் (Pez Dispenser) என்னும் விளையாட்டுப் பொருள் வெளி நாடுகளில் பிரபலமானது. நம் ஊரில் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போகும் பென்ஸில் பாக்ஸ் போன்ற ஒரு பாக்ஸ். இதற்குள் அரிசி மிட்டாய், பெப்பர்மின்ட் போன்ற சின்ன மிட்டாய்களைப் போடலாம். தலைப்பாகம் பொம்மை வடிவம்.

அதை அழுத்தினால், டிஸ்பென்ஸரின் கீழிருந்து மிட்டாய் கொட்டும். இந்த டிஸ்பென்ஸர்கள் வகை வகையான பொம்மைகளாக வரும். மிக்கி மவுஸ், ஸ்நோ ஒயிட், லயன் கிங், ஸ்பைடர்மேன், பேட்மேன், கால் பந்து, ஹாக்கி பந்து என ஆயிரக்கணக்கான ரகங்கள், விதங்கள்.

அமெரிக்காவில் பல வகை டிஸ்பென்ஸர்களைச் சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கு. பமேலாவுக்கும் டிஸ்பென்ஸர்கள் சேகரிக்கும் பழக்கம் இருந்தது.

ஒரு நாள் இரவு. பியர், பமேலா இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பமேலா சொன்னார், ‘டிஸ்பென்ஸர் கள் கலெக்‌ஷன் எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரே மாதிரியான பொம்மைகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அவற்றைக் கொடுத்து என்னிடம் இல்லாத பொம்மைகளை வாங்க ஆசைப்படுகிறேன். அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை’

வரப்போகிற மனைவியை இம்ப்ரஸ் செய்ய லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. பியர் தன் மூளையை ஓவர்டைமில் ஓட விட்டார். வழியை கண்டுபிடித்தார். செப்டம்பர் 3, 1995. பியர், தன் காதலிக்காக ஆக்‌ஷன்வெப் (Auction Web) என்னும் இணையதளம் தொடங்கினார்.

பமேலாவிடம் உபரியாக இருக்கும் டிஸ்பென்ஸர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார். அவரோடு டிஸ்பென்ஸர்கள் பரிமாற்றம் செய்ய விரும்புவோரைத் தொடர்புகொள்ளச் சொன்னார். பதில்கள் வரும் என்று பியருக்கு நம்பிக்கையே இருக்கவில்லை. ஆச்சரியம்! ஆச்சரியம்! பதில்கள் வந்து கொட்டின.

இந்த வெற்றியால் பியரின் தன்னம்பிக்கை டாப் கியருக்கு போனது. அவர் ஆக்‌ஷன் வெப் இணையதளத்தில் ஒரு குறும்பு செய்தார். அவரிடம் ரிப்பேரான ஒரு லேஸர் லைட் இருந்தது. அதை விற்பனைக்கு விட்டார். ‘உடைந்த லேஸர் பவர் பாயிண்ட் விளக்கு. மாடல் நம்பர்.......புது பாட்டரி போட்டாலும் வேலை செய்வதில்லை.

வாங்கிய விலை 30 டாலர். எதிர்பார்க்கும் குறைந்த விலை ஒரு டாலர். நீங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும் விலையை இமெயில் செய்யுங்கள். பதினைந்து நாட்களில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பொருள் சொந்தம்.’

பதில் வருமென்று பியர் எதிர்பார்க்கவில்லை. மூன்று டாலர் தருவதாக முதலில் ஒரு இமெயில் வந்தது. இதை இணையதளத்தில் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விலை மெல்ல மெல்ல நான்கு, ஐந்து, ஆறு, ஏழு டாலர்கள் என விலை ஏறியது. கடைசி நாள். பதினான்கு டாலர்கள் தருவதாக இமெயில்.

பணம் வந்தது. இன்டர்நெட்டில் பியரின் முதல் போணி, காயலான்கடை லேஸர் லைட் பதினான்கு டாலருக்கு.

ஆக்‌ஷன்வெப் இணையதளத்தில் கூட்டம் அலை மோதியது. தினமும் ஆயிரக்கணக்கான ஏலங்கள் அரங்கேறின. பியர் தன் இன்டர்நெட் தொடர்பை, பெஸ்ட் (Best) என்னும் கம்பெனியிடமிருந்து வாங்கியிருந்தார். இணையதள போக்குவரத்தைச் சமாளிக்க முடியாமல் பெஸ்ட் கம்பெனி திணறியது. 1996 இல் அவரிடம் சொன்னது.

‘நீங்கள் இப்போது மாதம் 30 டாலர்கள் மாதச் சந்தா தருகிறீர்கள். இனிமேல், மாதம் 250 டாலர் தந்தால்தான் எங்கள் சேவையைத் தொடர முடியும்.’

இந்தச் செலவைச் சமாளிக்க, தன் இணையதளத்தைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்க பியர் முடிவு செய்தார். வந்தது விலைப் பட்டியல். பொருட்கள் வாங்குபவர்களுக்கு கட்டணம் கிடையாது. விற்பவர்கள், 25 டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு இரண்டரை சதவீதமும், 25 டாலருக்கு மேற்பட்ட விலைக்கு மேல் விற்பனையாகும் பொருட்களுக்கு ஐந்து சதவீதமும் கட்டணம் கொடுக்க வேண்டும். கம்பெனி பெயரும் இ-பே என்று மாறியது.

கட்டணம் வசூலிக்கத் தொடங்கியபின் இணையதளத்தில் கூட்டம் குறையும் என்று பியர் நினைத்தார். மாறாக, எகிறியது. லட்சக் கணக்கானோர் கவரில் பணத்தைப் போட்டு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். வீடு முழுக்கக் கவர்கள்.

அவற்றை பிரித்துப் பணத்தை எடுக்கக்கூட நேரம் இல்லாமல் பியரும், பமேலாவும் திண்டாடினார்கள். ஒத்தாசைக்கு கிரிஸ் அகர்பாவ் (Chris Agarpao) என்ற நண்பர் வேலைக்குச் சேர்ந்தார். அவருடைய வேலை? கவர்களை கிழித்து, பணத்தை எண்ணி வைப்பது!

பியருக்கு இப்போது இரண்டு உண்மைகள் புரிந்தன. அவை:

ஏராளமான மக்கள் தங்கள் பழைய பொருட்களைப் பரிமாற்றம் செய்ய நம்பிக்கையான இடைத்தரகரை விரும்புகிறார்கள்.

ஏல வியாபாரம் செய்வதில் மக்களுக்கு ஒரு திரில் இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் இந்த தேவைகள் அடிப்படையில், நம்பிக்கையான இடைத்தரகு செய்யும் இணையதளமாக இ-பே நிறுவனத்தை பியர் உருவாக்கினார்.

நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி. இன்று ஏலம் மட்டுமல்ல, சாதாரண வியாபாரமும் இ-பே மூலம் நடக்கிறது.

இன்று இ-பே நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 16 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்). உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x