Last Updated : 10 Mar, 2015 09:35 AM

 

Published : 10 Mar 2015 09:35 AM
Last Updated : 10 Mar 2015 09:35 AM

14-வது நிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்துக்கு ரூ.2,700 கோடி வருவாய் இழப்பு: பிஹார், அசாம், திரிபுரா மாநிலங்களுக்கும் குறைந்தது

14-வது நிதிக் குழு பரிந்துரையால் தமிழகத்துக்கு ரூ. 2,700 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 42 சதவீதம் அளிக்க வேண்டும் என 14-வது நிதிக்குழு பரிந்துரை செய்தது. கே.வி. ரெட்டி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுள்ளது.

முந்தைய ஆண்டு அளிக் கப்பட்ட 32 சதவீதத்தைவிட 10 சதவீதம் கூடுதலாக ஒதுக்க பரிந் துரைக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் தொகை அடிப்படையிலும், முன்னேறிய மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்ற அளவிலும் தமிழகத்துக்கு முந்தைய ஆண்டு கிடைத்ததை விட ரூ. 2,700 கோடி அளவுக்கு வரி வருவாய் குறையும் என தெரிய வந்துள்ளது.

நிதிக்குழு பரிந்துரை காரணமாக அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் பட்டியலில் உத்தராகண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்கள் சேர்ந்துள்ளன. இவ்விரண்டு மாநிலங்களுக்கும் அதிகபட்சமாக 30 சதவீத அளவுக்கு வரி வருமானம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ. 2,800 கோடியும், திரிபுராவுக்கு ரூ. 1,500 கோடியும் குறையும் என தெரியவந்துள்ளது. நிதிக்குழு பரிந்துரையின்படி உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ. 9,700 கோடியும், திரிபுராவுக்கு ரூ. 4,850 கோடியும் நடப்பு நிதி ஆண்டில் கிடைக்கும்.

நிதிக்குழு பரிந்துரையால் பாதிக்கப்பட்ட பிஹார் மாநிலத் துக்கு ரூ. 1,200 கோடி குறையும். அசாம் மாநிலத்துக்கு இதைவிட இருமடங்கு அதாவது ரூ. 2,400 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு இருக்கும். நிதிக்குழுவின் பரிந்துரை ஏமாற்றம் அளிப்பதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். இந்த இழப்பீடு ஈடு செய்யப்படாவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13-வது நிதிக்குழு பரிந்துரை யுடன் ஒப்பிடுகையில் பிஹார் மாநிலத்துக்கு 1.3 சதவீத அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீட்டு அளவான ரூ. 50,660 கோடியில் ரூ. 2,700 கோடி குறையும் என தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படலாம் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன தற்போது ஒரு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டு அளவீடு மட்டும் வெளியாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக மதிப்பீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை. அவ்விதம் வெளியாகும் போது முழு இழப்பு மதிப்பீடு தெரியவரும்.

14-வது நிதிக்குழு தனது பரிந்துரையில் சில மாநிலங்களுக்கு சிறப்பு பிரிவில் ஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ளது. நிதி பகிர்ந் தளிப்பு விதிமுறைகளை இதற்கென வகுத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், மிஜோரம் ஆகிய வற்றுக்கான ஒதுக்கீடு அதிகரித்த போதிலும் அத்தகைய ஒதுக்கீடு பிஹார் மாநிலத்துக்குக் கிடைக்க வில்லை. மாநிலங்களுக்கான வரி வருவாய் ஒதுக்கீடு 37 சதவீதம் எனில் அது ரூ. 1.41 லட்சம் கோடி யாகும்.

மத்திய பட்ஜெட்டில் மாநிலங் களுக்கான ஒதுக்கீட்டு அளவு குறைக்கப்பட்டு ரூ. 1.34 லட்சம் கோடியாக உள்ளது. எனவே இந்தத் தொகையைத்தான் பகிர்ந் தளிக்க வேண்டியிருக்கும் என்று நிதிக்குழு உறுப்பினரான அபிஜித் சென் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் 14-வது நிதிக்குழு அளித்த பரிந்துரையைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு மாநிலங் களுக்கு 2014 15-ம் நிதி ஆண்டில் அளித்த ஒதுக்கீடு ரூ. 7.62 லட்சம் கோடியாகும். இது வரும் நிதி ஆண்டில் 2015-16-ல் ரூ. 7.93 லட்சம் கோடியாக உயரும். அதாவது அதிகபட்சம் 4 சதவீத அதிகரிப்பாகும் என்று அபிஜித் சென் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் ஆதரவில் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சமுக நல திட்டங்களுக்கான ஒதுக்கீடு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இந்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது.

14-வது நிதிக்குழுவின் பரிந்து ரையால் தங்களது மாநிலங்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை மதிப்பீடு செய்யும் பணியை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

சில மாநில முதல்வர்கள் இந்த விஷயத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x