Last Updated : 08 Mar, 2015 12:54 PM

 

Published : 08 Mar 2015 12:54 PM
Last Updated : 08 Mar 2015 12:54 PM

கடனுக்கான வட்டி விகிதத்தை நிச்சயம் குறைப்போம்: ஆந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் சி.வி.ஆர். ராஜேந்திரன் நேர்காணல்

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்துவருவது சமீபத்திய பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதுதொடர்பாகவும் பி.ஜே.நாயக் கமிட்டியின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் ஆந்திரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.வி.ஆர். ராஜேந்திரனிடம் பேசினோம்.

தேவக்கோட்டையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பு வரை தமிழ் வழிக் கல்வி. கார்ப்பரேஷன் வங்கியில் கிளார்க்காக தனது வங்கிப் பணியை தொடங்கியவர். அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்வின் மூலம் புரொபஷனரி அலுவலராக சேர்ந்தார். 33 ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு, ’பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா’வின் செயல் இயக்குநர் ஆனார். அதன்பிறகு, ’ஆந்திரா வங்கி’யின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வரும் ஏப்ரலில் ஓய்வு பெறுகிறார்.

‘ஆந்திரா வங்கி’யின் நிகர வாராக் கடன் 6% அளவுக்கு இருக்கிறது. எப்படி அதிகரித்தது? எப்போது இது குறைந்து சகஜ நிலைக்கு திரும்பும்?

ஆந்திரா வங்கியில் மட்டுமல்ல.. நிறைய வங்கிகளில் இதே நிலை தான். இது ஒரு சுழற்சி. கட்டுமானம் மற்றும் மின் துறை திட்டங்களுக்கு ஆந்திரா வங்கி அதிக அளவில் கடன் கொடுத்தது. நிதிப் பற்றாக் குறை காரணமாக நிதி முடங்கியுள் ளது. மின் திட்டங்களைச் செயல் படுத்துவதில் நிறைய பிரச்சினை கள் இருந்தன. திட்டங்களை செயல் படுத்தும் காலம் நீண்டு கொண்டே போனதால் வாராக்கடன் அதிகரித் தது. நாட்டின் மின் தேவை தொடர் கிறது. மின் திட்டங்கள் நிறைவேறத் தொடங்கினால், படிப்படியாக வாராக்கடன் அளவு குறையும்.

ஆந்திராவும், தெலங்கானாவும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கின்றன. இதற்கு முன்பு மத்திய அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்த போது அவர் களிடம் இருந்த தொகையை கொடுத்து கணக்கினை முடித்தார் கள். ஆனால் இப்போது மாநில அரசு ஆண்டுக்கு 20/25 சதவீத தொகையை கொடுப்பதாக தெரி வித்திருப்பதால், இந்த கடன்கள் திரும்பி வர சில காலம் ஆகும். விவசாயத்தில் மட்டும் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் இருக்கிறது. இருந்தாலும் மார்ச் மாதத்துக்குள் 1,000 கோடி அள வுக்கு திரட்ட முடிவு செய்திருக் கிறோம். கூடியவரை நிகர வாராக் கடனை 2 சதவீதத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகி றோம்.

ஆந்திரா வங்கி’யை இன்னொரு பொதுத்துறை வங்கியுடன் இணைக் கப் போவதாக செய்தி வந்ததே?

அது வதந்தி. இப்போதைய சூழ்நிலையில் எந்த வங்கியும் இன்னொரு வங்கியை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு திறன் பெற்றிருக்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளுக்கு எந்த இணைப்பும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் சர்வதேச அளவில் பெரிய வங்கிகளாக இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் இருக்க வேண்டும் என்றால், அப்போது வங்கிகள் இணையத்தான் வேண்டும். சில வருடங்களுக்கு பிறகு சிறப்பாக செயல்படாத வங்கிகள் இணை வதற்கான வாய்ப்பு இருக்கும்.

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 51 சதவீதத்துக்கும் கீழ் இருக்க வேண்டும் என்று பி.ஜே.நாயக் கமிட்டியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பற்றி..?

51 சதவீதத்துக்கு கீழ் குறையும் போது அரசாங்கத்தின் தலையீடு குறையும் என்பதை விட வேறு சில பிரச்சினைகள் நீங்கும். மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாடு குறையும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற என்னுடைய வங்கி நண்பர் இன்னமும் சிபிஐக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஒருவருக்கு கடன் கொடுக்கிறோம் என்றால் அது ஒரு பிஸினஸ். அது தோல்வி அடையும்போது மட்டும் அந்த வங்கி அதிகாரி (பொதுமேலாளராக இருந்தவர்) எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? இதனால் முக்கியமான முடிவுகளை அதிகாரிகள் சுதந்திரமாக எடுக்க முடியாமல் போகிறது. ஆனால், இதேமாதிரியான எந்த செயலுக்கும் தனியார் வங்கிகளின் அதிகாரிகள் பாதிக்கப்படுவதில்லை.

அதுமட்டுமல்ல. எஸ்பிஐ வங்கித் தலைவருக்கு கொடுக்கப் படும் சம்பளம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை. ஆனால் தனியார் வங்கிகளின் தலைவர்களுக்கு சில கோடிகள் வரை சம்பளம் கிடைக்கிறது. அவர் கள் சந்திக்கும் அதே பிரச்சினை யைத்தான் பொதுத்துறை வங்கி களின் தலைவர்களும் சந்திக் கிறார்கள். ஆனால் சம்பளத்தில் பெரிய வேறுபாடு.

சம்பளத்தை பொருத்துத்தான் திறமையான நபர்கள் பொதுத் துறை வங்கிகளுக்கு வரத் தயா ராவார்கள். அரசின் பங்கு 51 சதவீதத்துக்கு கீழ் வரும்போது இந்த முடிவுகள் அனைத்தையும் இயக்குநர் குழு எடுக்கும். வங்கி யின் செயல்பாடு சிறப்பாக இருக் கும். பி.ஜே.நாயக் கமிட்டியின் பரிந்துரையை நாங்கள் வரவேற் கிறோம்.

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளைக் குறைக்கும் போது சமூக நலத்திட்டங்கள் (விவசாயக் கடன் உள்ளிட்ட) குறைந்து லாபம் மட்டுமே பிரதானமாக இருக்குமே?

முன்னுரிமை கடன்கள் என்பது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்வது. இதனை அனைத்து வங்கிகளும் செயல்படுத்த வேண்டும். தவிர, விவசாயிகளுக்கு நேரடியாக கடன் கொடுப்பதுதான் வங்கிகளுக்கு லாபம். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்.

இப்போது சந்தை விலையில் காஸ் வாங்கிய பிறகு, மானியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுபோல விவசாயிகளும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எங்களிடம் கடன் வாங்கிக் கொள்ளட்டும். மக்களுக்கு கொடுக்கும் மானி யத்தை அரசு நேரடியாக கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறோம். அவை நடைமுறைக்கு வரும்போது, விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை கடன் கொடுப்பதில் பிரச்சினை ஏதும் இல்லையே?!

நாங்கள் வட்டி விகிதத்தை குறைத்துவிடுகிறோம். ஆனால் அந்த சலுகைகளை மக்களுக்கு வங்கிகள் கொடுப்பதில்லை என்று ரிசர்வ் வங்கி வைக்கும் குற்றச்சாட்டு பற்றி..?

நாங்கள் வாங்கும் மொத்த தொகைக்கான வட்டி குறையவில்லை. பொதுமக்களின் டெபாசிட்டுக்கு நாங்கள் கொடுக்கும் வட்டி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சேர்த்துதான் கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்ய முடியும். அதற்கு முதலில் டெபாசிட்டுக்கான வட்டியை குறைக்க வேண்டும். தவிர ஏற்கெனவே அதிக வட்டிக்கு டெபாசிட் எடுத்திருப்போம். அவர்களுக்கு சரியான வட்டி கொடுக்க வேண்டும் என்றால் தற்போதைய நிலையில் சில காலம் காத்திருக்க வேண்டும்.

அதனால் டெபாசிட் விகிதத்தை குறைத்த சில மாதங்களுக்கு பிறகுதான் கடனுக்கான வட்டியை குறைக்க முடியும். அப்போதுதான் நிகர வட்டி வரம்பினை குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்திருக்க முடியும். நிச்சயம் வட்டியை குறைப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சிறிய வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் உங்களது வர்த்தகம் பாதிக்கப் படாதா?

அமெரிக்காவில் 8,000 வங்கிகள் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை 30 கோடிப் பேர். ஆனால் 120 கோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் சுமார் 55 வங்கிகள்தான் இருக்கின்றன. இன்னும் 100 வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தாலும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஆந்திரா இரண்டாக பிரிக்கப் பட்டுவிட்டது. ஆனாலும் பெயர் ’ஆந்திரா வங்கி’ என்றே உள்ளது. பெயர் மாறுமா?

பரோடா என்பது குஜராத்தில் இருக்கும் ஒரு ஊர். அந்த பெயரில் ‘பேங்க் ஆஃப் பரோடா’ வங்கி இருக்கிறது. சர்வதேச அளவில் அவர்களுக்கு 100 வங்கிக் கிளை கள் இருக்கின்றன. இது ஒரு பெயர். அவ்வளவுதான்! உண்மை யைச் சொல்ல வேண்டுமென்றால் ஆந்திராவை விட தெலங்கானா வில்தான் எங்களுக்கு அதிக வர்த்தகம் நடக்கிறது. அதனால் இப்போதைக்கு பெயரை மாற்றுவதற்கான அவசியம் ஏதும் இல்லை. தவிர, இது அதிக செலவுக்கான விஷயமும்கூட.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x