ஜிஎஸ்டி: வரி விதிப்பு முறையை மாற்றியமைக்கும்: நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை

ஜிஎஸ்டி: வரி விதிப்பு முறையை மாற்றியமைக்கும்: நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை
Updated on
2 min read

மத்திய அரசு அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையால் இந்தியாவின் வரி விதிப்பு முறையையே மாற்றியமைக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது: இந்த வரி விதிப்பு புரட்சிகரமானது என்று கூறுவதற்குக் காரணம் உள்ளது.

அதாவது 1991-ம் ஆண்டு இந்தியா தாராளமயமாக்கலுக்கு அடியெடுத்து வைத்தபோது நிகழ்ந்த மாற்றங்களை விட அபரி மிதமான மாற்றங்கள் இதனால் ஏற்படும். அரசு செயல்பாடுகளில் எப்படி அடிப்படையான மாற்றங்கள் உருவானதோ அதேபோன்று ஜிஎஸ்டி அமலாக்கமும் மாற்றத்தை உண்டாக்கும்.

இதை அமல்படுத்துவதால் மாநில அரசுகளின் வரி விதிப்பு முறை மேலும் வலுப்பெறும். மாநிலங்கள் மட்டுமின்றி பஞ்சாயத்துகள், நகராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகளோடு மத்திய அரசின் வரி விதிப்பு முறையும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதன் மூலம் மத்திய- மாநில அரசுகளின் அதிகார பரவலாக்கல் நடைபெறும். இது நிதி நிலை உருவாக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டினார். 1991-ம் ஆண்டுகளில் தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக தனியார் துறைகளுக்கு பெருமளவில் அனுமதி அளிக்கப்பட்டது.

மத்திய வரி வருவாயில் அதிகபட்ச ஒதுக்கீட்டை மாநிலங் களுக்கு அளிக்க 14-வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்பு 32 சதவீதமாக இருந்த வரி வருவாய் ஒதுக்கீடு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு 2014-15-ம் நிதி ஆண்டில் அளிக்கப்பட்ட ரூ. 3.48 லட்சம் கோடி தொகை 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ. 5.26 லட்சம் கோடியாக உயரும் என்றார்.

இதன் மூலம் அடுத்த நிதி ஆண்டிலிருந்து ஜிஎஸ்டி வரவால் மறைமுக வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதோடு சரக்கு மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு பின்பற்றப்படும். இந்தியாவில் வரி செலுத்துவோர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று சின்ஹா குறிப்பிட்டார்.

இந்தியாவில் குறைவான வரி விதிப்பு மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே வரி செலுத்துவதால் அதிக அளவில் சமூக பாதுகாப்பு திட்டங்களை அரசால் செயல்படுத்த முடியவில்லை என்றும் இதற்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியவில்ல என்றும் குறிப்பிட்டார்.

2016 ஏப்ரலில் ஜிஎஸ்டி

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதில் அரசு உறுதியோடு உள்ளது என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைக்கு ஒரு முனை வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை அமல்படுத்துவதால் ஏற்படும் இடையூறுகளைக் களைவது உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநில அரசுகளுடனும் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இது அமல்படுத்தவேண்டும் என்பதற்காக மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் நிதி ஆண்டில் அரசு நிர்ணயித்துள்ள ஒட்டுமொத்த வரி வருவாய் இலக்கான ரூ.14.49 லட்சம் கோடியை நிச்சயம் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். இத்தொகையானது நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வரி வருவாய் அளவைக் காட்டிலும் 15.83 சதவீதம் அதிகமாகும்.

இந்தியா சுதந்திரமடைந்தபிறகு நேரடி வரி வருவாயில் மேற் கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றமாகும் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in