

தங்கத்தை பணமாக்கும் ‘தங்க பத்திரம்’ திட்டம் மற்றும் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிடுவது ஆகியவை நல்ல முடிவு என நகை விற்பனையாளர்களும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் (என்பிஎப்சி) தெரிவித்துள்ளன.
அதேநேரம் இந்த திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் நோக்கம் நிறைவேறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இதுபோன்ற திட்டங்கள் நடைமுறைக்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து இந்திய ஜெம் அன்ட் ஜுவல்லரி சங்கங்களின் சம்மேளன நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் விஎன்எம் ரவி ‘பிசினஸ்லைன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்ட 2 திட்டங்களும் தங்கத்தை பணமாக மாற்றுவதற்கு உதவும். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள தனி நபர்கள் மற்றும் குடும்பத்தினரால் சேமித்து வைக்கப்பட்டுள்ள அல்லது பயனில்லாமல் கிடக்கும் ஏராளமான தங்கம் புழக்கத்துக்கு வரும்.
அதாவது முடங்கி உள்ள ஏராளமான தங்கத்தை சந்தைக்குக் கொண்டுவந்து பொருளாதார நடவடிக்கையில் பங்குபெறச் செய்வதற்கு ‘தங்க பத்திரங்கள்’ உதவும்.
எனினும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்குமா, முதலீட்டாளர்களுக்கு பயனளிக்குமா என்பதை செயல்பாட்டுக்கு வந்தால் தான் சொல்ல முடியும்.
இதற்கு முன்பு தங்கத்தை பணமாக்கும் திட்டங்கள் வங்கிகள் மூலம் அமல்படுத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தங்கம் வைத்திருப் பவர்களை பெரிய அளவில் கவரவில்லை.
இதுபோல அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட முடிவு செய்திருப்பதும் மிக நல்ல திட்டம்தான். இதன்மூலம் நாணயங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு ரவி தெரிவித்தார்.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமன் கூறியதாவது:
அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணய விற்பனை திட்டம் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் தங்கத்தை மறுசுழற்சி செய்யவும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
பொதுமக்களிடம் செயல்படாமல் உள்ள தங்கத்தை செயல்படத்தக்க நிதி சொத்தாக மாற்றுவதற்கு தங்கத்தை பணமாக்கும் திட்டம் உதவும். தங்க நகைகள் வாங்கும்போது ரொக்கமாக செலுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக, டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
தங்க டெபாசிட் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்
வீடுகளில் பயன்படுத்தாமல் 20,000 டன் தங்கம் முடங்கி இருக்கிறது. இதனை டெபாசிட் செய்து வருமானம் பெறலாம் என்றும் தங்க நகை கடைகள் வங்கிகள் மூலம் கடன் பெறலாம் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எஸ்பிஐ வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் டெபாசிட்டாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தங்கத்தை ரொக்க கையிருப்பு விகிதமாகவோ, எஸ்.எல்.ஆர் விகிதமாகவோ வைத்துகொள்ள அனுமதிக்கும் பட்சத்தில், வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் கடன் வழங்கும் விகிதம் அதிகரிக்கும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 800 முதல் 1000 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.