

ஓலா கேப்ஸ் தன்னுடைய போட்டி நிறுவனமான டாக்ஸி பார் ஷ்யூர் நிறுவனத்தை கையகப் படுத்தியுள்ளது. 20 கோடி டாலர் கொடுத்து இந்த நிறுவனத்தை ஓலா வாங்கி இருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டாலும் இரு நிறுவனங்களும் தனித்தனி பெயரிலேயே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸி பார் ஷ்யூர் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்கள் மற்றும் துறை தலைவர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். தற்போது தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஒ.ஒ) இருக்கும் அர்விந்த் சிங்கால், டாக்சி பார் ஷ்யூர் நிறுவனத்துக்கு தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நிறுவனத்தின் நிறுவனர்களான ஜி.ரகுநந்தன் மற்றும் ஏ.ராதா கிருஷ்ணா இருவரும் குறிப்பிட்ட காலத்துக்கு ஆலோசகர்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இணைப்பு குறித்து பேசிய ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறியதாவது. இந்த இணைப்பு வரவேற்கத்தக்கது. டாக்சி பார் ஷ்யூர் நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்வதை எதிர்பார்க்கிறோம். இருவரும் ஒரே நோக்கத்தில் செயல்படுபவர்கள் என்று கூறினார்.
இந்த இணைப்புக்கு பிறகு நிறுவனம் மிகவும் பலமானதாக மாறும். இதனால் எங்களது பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பினை கொடுக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையை அளிக்க முடியும் என்று டாக்ஸி பார் ஷ்யூர் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ரகுநந்தன் தெரிவித்தார்.
ஓலா நிறு வனமும், டாக்ஸி பார் ஷ்யூர் நிறு வனமும் செயல் படும் விதம் வெவ் வேறாகும்.
டைகர் குளோபல், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், செக்யூஷியா (Sequoia) கேப்பிடல், ஸ்டெட்வியூ கேப்பிடல் ஆகிய நிறுவனங்களின் துணை கொண்டு ஓலா கேப்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. சமீபத்தில் ஜப்பானில் சாப்ட் பேங்க் நிறுவனமும் ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
ஆக்ஸெல் பார்ட்னர்ஸ், பேஸ்மெர் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் ஹிலியன் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் டாக்ஸி பார் ஷ்யூர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் தற்போது 47 நகரங்களில் 15,000க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஓலா நிறுவனம் ஒரு லட்சம் வாகனங்களுடன் இந்த சந்தையில் முன்னணியில் இருக்கிறது.