

நுகர்வோர் பொருள்களை நேரடி விற்பனைச் சந்தையில் விற்பனை செய்யும் ஆம்வே இந்தியா நிறுவனம் தனது பொருள்களைத் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆலை மதுரையை அடுத்த திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் அமைய உள்ளது. ரூ. 500 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலை இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தியைத் தொடங்கும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் திப்தர்க் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார். இந்த ஆலை அமைவதன் மூலம் நேரடியாக 475 பேருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இது தவிர பலருக்கு மறைமுக வேலை வாய்ப்புக் கிடைக்கும்.
1988-ம் ஆண்டு விற்பனையைத் தொடங்கியபோது இந்நிறு வனத்தின் வருமானம் ரூ. 91 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 2,169 கோடியாகும். இந்த ஆண்டு விற்பனை வருமானம் இதைவிட அதிகமாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
ஆம்வே நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்வே கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ரூ. 151 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் ரூ. 22 கோடி நேரடி அந்நிய முதலீடாகும். இந்நிறுவனம் 140 தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்கிறது.
நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதில் ஆம்வே நிறுவனம் முன்னணியில் திகழ் கிறது. இந்நிறுவனத்தின் சர்வதேச விற்பனை வருமானம் 1,180 கோடி டாலராகும். இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில்தான் அதிக அளவில் ஆம்வே தயாரிப்புகளைப் பயன்படுத்துவதாக பட்டாச்சார்ஜி தெரிவித்தார். இந்தியாவில் 4,000 நகரங்களில் இந்நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.