நிப்டி 9,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சம்

நிப்டி 9,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சம்
Updated on
1 min read

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று (செவ்வாய்க்கிழமை) 9,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை முதல் முறையாக எட்டியது.

மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 134.59 புள்ளிகள் உயர்ந்து 29593.73 ஆக இருந்தது. அதேவேளையில், நிப்டி 39.50 புள்ளிகள் உயர்ந்து 8996.25 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்திருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் இடையே நிப்டி 47.20 புள்ளிகள் உயர்ந்து (0.52%) 9,003.95 என்ற புதிய உச்சத்தை முதல் முறையாக எட்டி வரலாறு படைத்தது. ஜனவரி 30-ல் 8,996.60 என்ற நிலையை எட்டியதே இதுவரை அதிகபட்ச உயர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகளின் விலை 4 சதவீதம் உயர்ந்து ரூ.903-க்கு விற்பனை ஆனது. டி.சி.எஸ்., சிப்லா, சன் ஃபார்மா, எச்.டி.எப்.சி., சேஸா ஸ்டெர்லைட், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறிப்பிடும் வகையில் உயர்ந்துள்ளன.

மத்திய பொது பட்ஜெட்டில் வளர்ச்சி மற்றும் சந்தைக்கு ஆதரவான சில அறிவிப்புகள் இருந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் வரவினால் இந்த புதிய உச்சத்தை நிப்டி அடைந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 28-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு பிறகான முதல் வர்த்தக நாளில் (திங்கட்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி இருக்கின்றன.

பெரும்பாலான பங்குச் சந்தை வல்லுநர்கள், இது வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும், பங்குச் சந்தைகள் இன்னும் மேலே உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க சாதகச் சூழல் நிலவுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in