

பொதுத்துறை வங்கிகளில் மிக அதிக கிளைகளைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வீட்டுக் கடன் பெற்று செலுத்தத் தவறியவர்களிடம் ஜப்தி மூலம் கையகப்படுத்திய வீடுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக மிகப் பெரிய அளவிலான ஆன்லைன் ஏலத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. எஸ்பிஐ ரூ. 62,000 கோடி அளவுக்கு வாராக் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இத்தகைய ஏல நடவடிக்கை மூலம் இந்த சுமையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த வார இறுதியில் கையகப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், நிறுவனங்களின் கிடங்குகள் (வேர்ஹவுசஸ்) மற்றும் அலுவலகங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 1,300 கோடியாகும்.
நாடு முழுவதும் ஏலம் மூலம் நடத்தப்படும் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை இதுவாகும். இதன் மூலம் வருமானம் தராத சொத்துக்களை விற்று ரொக்கமாக மாற்ற எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பாக வங்கிகளின் வாராக் கடன் குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது. நீண்டகாலமாக திரும்பாமல் உள்ள கடனை திரும்பாக் கடன் என பட்டியலிடாமல் அவற்றை ஆதாயமாக்க வங்கிகளுக்கு வழி ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ கையகப்படுத்திய வீடுகள், அலுவலகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதேபோல நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகள் தாங்கள் கையகப்படுத்திய சொத்துகளை விற்பதன் மூலம் சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஈட்ட முடியும் என வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வாராக் கடன் மீட்பு நடவடிக்கை மற்றும் சொத்துகளை ஏலம் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இன்னும் முழு வீச்சில் ஈடுபடப் போவதாக பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் பர்வீண் குமார் தெரிவித்தார். முடக்கப்பட்ட சொத்துகளை நிர்வகிக்கும் பிரிவுக்கு இவர் தலைமையேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏலம் விடும் நடவடிக்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் வசதி உள்ளது. இது தொடர்பாக தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஏலம் தொடர்பான விவரங்களை அளிக்கவும், சட்ட சிக்கலை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதானிக்கு கடன் இல்லை?
அதானி குழுமத்துக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க முடியாது என்ற முடிவை எஸ்பிஐ எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் 700 கோடி டாலர் மதிப்பிலான நிலக்கரி திட்டப் பணியை மேற்கொள்ள பாரத ஸ்டேட் வங்கியிடம் 100 கோடி டாலர் தொகையை அதானி குழுமம் கடனாகக் கேட்டிருந்தது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. ஆனால் இப்போது இந்த அளவுக்கு அதிக தொகையை தர முடியாது என்ற முடிவை எஸ்பிஐ எடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை எதையும் அதானி குழுமத்துக்கு வங்கி அளிக்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் வங்கி எடுத்த முடிவு தகவலாக அதானி குழுமத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.