

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்து வோம் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் ரகுராம் ராஜன் உறுதிபடக் கூறினார். இந்த இலக்கு 2016-17-ம் நிதி ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் எட்டப்படும் என்று அவர் கூறினர்.
ரெபோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது தொடர்பாக நிபுணர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
இந்த இலக்கை எட்டுவதற்கு அரசின் ஆதரவை ஆர்பிஐ எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறது என்று கேட்டதற்கு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அரசுக்கு உள்ள உறுதிப்பாட்டைப் பொறுத்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசு உறுதியுடன் இருப்பதைப் பொறுத்தே இது அமையும் என்றார்.
இரண்டு ஆண்டுகளில் பணவீக்கத்தை 4 சதவீத அளவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை எட்டுவதற்கு அரசு அளிக்கும் ஆதரவு, கடந்த காலங்களில் அளித்து வருவதைப் போல எதிர்காலத்திலும் தொடரும் பட்சத்தில் இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
2015-ம் ஆண்டில் பணவீக் கத்தை 6 சதவீதமாகவும், 2016-ம் ஆண்டில் 5 சதவீதமாகவும் குறைக்க ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. என்று அவர் கூறினார்.
ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 5.11 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரியில் 5.5 சதவீத அளவுக்கு இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நிதிக் கொள்கை வழிகாட்டுதல் தொடர்பாக அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான ஒப்பந்தம் பிப்ரவரி 20-ம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கால அவகாசம் வரையறுக் கப்பட்டுள்ளது. சில்லரை வர்த்தக குறியீட்டெண் 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் ஏப்ரல் 2016க்குள் கட்டுப்படுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது நுகர்வோர் குறியீட்டெண் (சிபிஐ) 4 சதவீதமாக உள்ளது.
அரசுடனான ஒப்பந்தத்தின் செயல்பாடு இப்போதுதான் தொடங்கியுள்ளது. பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
எனது கணிப்பின்படி இப்போதைய இணக்கமான சூழலில் ரிசர்வ் வங்கி செயல்படும்பட்சத்தில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் பணவீக்கம் முழுமையாக கட்டுக்குள் இருக்கும் என்றார். தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் வளர்ச்சி விகிதம் குறிப்பாக 2 சதவீத வட்டி குறைக்கப்படும் போது 2 சதவீத அளவுக்கு வளர்ச்சி அதிகமாக எட்டப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே 4 சதவீதத்துக்குள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதே சூழ்நிலை நீடிக்கும்பட்சத்தில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீத அளவுக்கு வட்டிக் குறைப்பு சாத்தியமாகும் என்று ராஜன் கூறினார்.