Last Updated : 02 Mar, 2015 09:46 AM

 

Published : 02 Mar 2015 09:46 AM
Last Updated : 02 Mar 2015 09:46 AM

கடமையில் கண்ணாக இருந்திருக்கிறார் ஜேட்லி

இந்த பட்ஜெட்டில் பெருவெடிப்பு ஏதும் இல்லை. தொழில்துறைக்கு பெரும் சலுகைகள் இல்லை, மத்தியதர வர்க்கத்துக்கு தனி உதவிகள் இல்லை, ஏழைகளுக்கு நன்கொடை இல்லை.

அடுக்கடுக்காக பல திரிகளுக்கு நெருப்பு வைத்திருக்கிறார், அவை வெடிக்கும்போது இன்னும் சில ஆண்டுகளுக்கு அந்த ஓசை காதில் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

ஜி.எஸ்.டி. உதயம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 2016-17 நிதியாண்டிலிருந்து நிச்சயம் அமலுக்கு வந்துவிடும் என்று அறிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பல வரிகள், அலையலையாக சலுகைகள் என்று மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் விற்பனை வரி உள்ளிட்டவற்றால் ஏற்படும் அலைக்கழிப்புகள் ஒழிந்து நாடு முழுக்க ஒரே சீரான வரி விதிப்புக்கு இது வழிவகுக்கும்.

வரி காரணமாக ஒரு தொழில் அல்லது சேவை இன்னொரு மாநிலத்துக்கு இடம் பெயர்வதும் நின்றுவிடும். வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீட்டுக்கு இது பெரிதும் ஊக்குவிப்பாக இருக்கும். குழப்பங்கள், வழக்குகள், கால விரயங்கள் நீங்கிவிடும். ஜி.டி.பி. மேலும் சில சதவிகிதங்கள் அதிகரிக்கும்.

நிறுவனங்கள் வரி

நிறுவனங்கள் மீதான வரி 30%-லிருந்து 25% ஆக அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். நிறுவனங்களுக்குத் தரப்படும் சலுகைகளும் விதிவிலக்குகளும் விலக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். பெரும்பாலான நாடுகளில் நிறுவனங்கள் மீதான சராசரி வரி விகிதம் 23.8 ஆக இருப்பதற்கேற்ப இந்தியாவிலும் இருக்கும்.

‘பொது வரி தவிர்ப்பு விதிகள்’ (ஜி.ஏ.ஏ.ஆர்.) அமல் 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது அன்னிய முதலீட்டாளர்களுக்கு நிம்மதியைத் தரும். திவால் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தமும் இந்தியாவில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும்.

செல்வ வரி ஒழிப்பு:

செல்வ வரியை ரத்து செய்வது என்பதும் நல்ல முடிவே. 2013-14-ல் செல்வ வரியாக வெறும் ரூ.1,008 கோடிதான் கிடைத்தது.

அப்போது மதிப்பிடப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு வெறும் 20,000 கோடி ரூபாய்கள்தான்! அதிகம் செலவு செய்து குறைவாக வரி பெற வேண்டுமா, குறைவாக செலவிட்டு அதிக வரி வருவாய் பெற வேண்டுமா என்று கேட்ட ஜேட்லி, ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பவர்களுக்கு 2% கூடுதல் வரி விதித்திருக்கிறார்.

கூட்டுறவு கூட்டாட்சி:

கூட்டாட்சித் தத்துவத்தை வலுப் படுத்தும் வகையில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து 2015-16-ம் நிதியாண்டுக்கு மாநிலங்களுக்கு ரூ.5.24 லட்சம் கோடியை வழங்கி யிருக்கிறார்.

2014-15-ம் நிதியாண்டில் இது வெறும் ரூ.3.38 லட்சம் கோடியாக இருந்தது. மானியங்கள், மத்திய அரசின் நிதியுதவி என்று எல்லாமுமாகச் சேர்ந்து மத்திய வருவாயில் மாநிலங்கள் 62% பெறும். நிதி வழங்கலில் மத்திய அரசின் நாட்டான்மை குறையும்.

பொது முதலீட்டுக்கு ஆதரவு:

அடித்தளக் கட்டமைப்புத் துறையில் அரசும் தனியாரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். முதலில் அரசு முன்வந்தால்தான் தனியாரும் சேருவார்கள் என்பதால் 2015-16-ல் ரூ.70,000 கோடியைத் தாண்டும் என்று ஜேட்லி அறிவித்துள்ளார். அடித்தளக் கட்டமைப்பில் தேசிய முதலீட்டு நிதி ரூ.20,000 கோடியுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.

வரியற்ற கடன் பத்திரங்கள் வெளியிடப்படும், அரசு-தனியார் கூட்டு செயல்பாடு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனால் நிதி பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 3.9% ஆக உயரும். 2008-ல் இருந்த 3.6%-ஐ விட இது அதிகம். அடுத்த 3 ஆண்டுகளில் இதை 3% அளவுக்குள் கட்டுப்படுத்த உத்தேசித்திருக்கிறார்.

தொழில் முனைவோர்களுக்கு ஆதரவு

தொழில்முகவோர்களுக்கு ரூ.20,000 கோடி முதலீட்டுடன் முத்ரா வங்கி தொடங்கப்படுகிறது. இது நடுத்தர, சிறு தொழில் முகவர்களுக்குக் கடனுதவி வழங்கும். இது தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் என்று ஜேட்லி நம்புகிறார்.

எதிர்காலத்தில் இவை என்னென்ன பலன்களை அளித்தாலும் நிகழ்காலத்தில் சில தரப்பினருக்கு ஏமாற்றம்தான் என்பதை மறுக்க முடியாது. மாதச் சம்பளம் வாங்குவோருக்கு பெயரளவுக்கு மருத்துவச் செலவு, போக்குவரத்துக்கான படிகளில் சலுகை தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான ஒதுக்கீடு சிறிது உயர்த்தப்பட்டிருந்தாலும் ஏழைகளுக்குப் பெரும் சலுகைகள் ஏதும் இல்லை.

சேவை வரியை 14% அளவுக்கு உயர்த்தியிருப்பதும் மக்கள் மீது சுமையை அழுத்தும். அரசியல் ரீதியாக மக்களிடம் ஆதரவு திரட்ட இவை உதவாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x