

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு பூங்காக்கள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 17 உணவு பூங்காக்கள் அமைக்க மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இவற்றுக்கான மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 6,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்த உணவு பூங்கா தவிர அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியும் இதில் அடங்கும்.
விவசாயிகள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பயன ளிக்கும் வகையில் இந்த உணவு பூங்காக்களில் அனைத்து வசதிகளும் இருக்கும்.
17 மெகா உணவு பூங்கா அமைப்பதற்கான செலவுத் தொகை ரூ. 2,030 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 850 கோடியாகும்.
இந்த பூங்காக்களில் அமைய உள்ள உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ரூ. 4,000 கோடி முதலீடு செய்யும் என தெரிகிறது.
மாநில அரசுகளிடமிருந்து 72 விண்ணப்பங்களும் தனியார் நிறுவனங்களிடமிருந்து 17 விண்ணப்பங்களும் வந்தன. இதில் மாநிலங்களுக்கு 10 பூங்கா அமைக்கவும், தனியாருக்கு 7 பூங்கா அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.
2008-09-ம் ஆண்டு ஏற்படுத் தப்பட்ட பெரிய உணவுப் பூங்கா அமைக்கும் திட்டத்தின்படி இதுவரை 42 உணவுப் பூங்காக் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் 25 பூங்கா அமைப்பதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப் பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த உணவுப் பூங்கா அமைப்பதற்கான அடிப் படைக் கட்டமைப்பு வசதிகள் அடுத்த 30 மாதங்களுக்குள் உருவாக்கப்படும். இவற்றில் 40 முதல் 50 உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாப், ஹரியாணா, ஆந்தி ரம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உணவு பூங்காக்கள் அமைய உள்ளது. கேரள மாநிலத்தில் 2 உணவுப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.
அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மேம்பாட்டு மண்டலம், ஜெயின் அக்ரோ டிரேடிங் நிறுவனம், ருச்சி அக்ரோனி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உணவுப் பூங்கா அமைக்க அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களாகும்.
இத்தகைய உணவுப் பூங்கா அமைவதன் மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். 5 லட்சம் விவசாயிகள் பயன டைவர் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் விளையும் பழங்கள், காய்கறி மற்றும் உணவு தானியங்களில் 2 சதவீதம் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. எஞ்சியவை வீணாகிறது.
இத்தகைய உணவுப் பூங்காக் கள் உருவாவதால் வேளாண் பொருள் வீணாவது குறையும். விளையும் பொருள்களை சேமிக்கும் வசதி, அவற்றை பதப் படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ஒரே இடத்தில் நடைபெற வழி ஏற்படும் என்று அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கூறினார்.
இத்தகைய உணவுப் பூங்கா அமைப்பதற்கு நிலத்தின் விலை தவிர்த்து திட்டத்துக்கான மொத்த முதலீட்டில் 50 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக அளிக்கும். அதிகபட்சம் ரூ. 50 கோடி என வரையறுக்கப்பட்டுள்ளது.