

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடி முதலீட்டில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை தமிழகத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இன்ஜின் அசெம்பிளிங் மற்றும் டெஸ்டிங் வசதி கொண்டதாக இருக்கும் இந்த ஆலை அடுத்த ஆண்டு ஜனவரியில் உற்பத்தியைத் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர் கிராமத்தில் இந்த ஆலை அமைப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழுமம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசான் ஃபிரோடியா தெரிவித்தார்.
எந்த நிறுவனத்துக்கான இன்ஜின் இங்கு தயாரிக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார். ரூ. 100 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலைக்கான மூலதனம் நிறுவனத்தின் உள் ஆதார வளத்தின் மூலம் திரட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஃபோர்ஸ் மோட்டார் நிறுவனம் சிறிய ரக வர்த்தக வாகனங்கள், பன்முக பயன்பாட்டு வாகனங்கள் (எம்யுவி), இலகு ரக வர்த்தக வாகனங்கள், எஸ்யுவி-க்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, விவசாயத் துக்கான டிராக்டர்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு 2 ஆலைகள் உள்ளன. புணேயில் உள்ள ஆலையில் டிராக்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் பிதம்பூரில் உள்ள ஆலையில் பிற வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.